ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் அங்கு சுற்றுலாவுக்குச் சென்றிருந்த 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதன் எதிரொலியாக, பாகிஸ்தானுடனான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டிருப்பதுடன் இருநாட்டு எல்லையில் போர்ப் பதற்றமும் அதிகரித்துள்ளது. காஷ்மீரில் பஹல்காம் படுகொலைக்கு தி ரெஸிஸ்டென்ஸ் ஃபிரண்ட் எனப்படும் பயங்கரரவாத அமைப்பு பொறுப் பேற்றிருக்கிறது. இந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பாகிஸ்தானுடனான 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக கடந்த புதன்கிழமை இந்தியா அறிவித்தது.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் ஆண்டணி, இதுதொடர்பாக, கருத்து ஒன்றினை தெரிவித்திருந்தார். அதில், "பாகிஸ்தானில் உள்ள மக்களும் நம் சகோதரர்கள் தான். அவர்கள் எதுவும் செய்யவில்லை. பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் வீணாப்போன நாலு பேர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் குறை கூற முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினையும் வெளியிட்டார்.
“ காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும், நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.
இவரது பதிவிற்கு பலர் எதிர்ப்பு செய்தநிலையில், தற்போது மீண்டும் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், “ என் பதிவை தவறாக புரிந்துகொண்டவர்கள் கவனத்திற்கு காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த, அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம், நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம் இறையான்மையை பாதுகாப்போம். “ என்று தெரிவித்துள்ளார்.