தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற இருக்கும் நிலையில், அறிவிப்பின் பின் இருக்கும் அரசியல் குறித்தும், விஜய் போடும் கணக்கு குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். வரும் செப்டம்பர் முதல், தமிழ்நாடு தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் விஜய், ஆகஸ்ட்டில் மாநாட்டை நடத்துகிறார். அக்கட்சியின் முதல் மாநில மாநாடு, கடந்த ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்றது. அக்டோபர் 27ம் தேதி நடைபெற்ற அந்த மாநாடு, கொள்கை விளக்க மாநாடாக அமைந்தது. இந்த நிலையில்தான், தவெகவின் 2-வது மாநில மாநாடு, மதுரை பாரபத்தியில் ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெற இருக்கிறது.
மாநாட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் பூமி பூஜையும் நடைபெற்று முடிந்துள்ளது. விருதுநகர் டூ தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பாரப்பத்தியில், 506 ஏக்கர் பரப்பளவில் உள்ள காலி இடத்தில் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, திடலை தயார் செய்யும் பணியும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், மாநாட்டிற்கு உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தை சந்தித்து மனு அளித்துள்ளார் பொதுச்செயலாளர் ஆனந்த்.
மாநாடு நடத்தப்போவதாக விஜய் அறிவித்த ஆகஸ்ட் 25, தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்த தேதி. 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி மதுரை திருமங்கலத்தில் பிறந்த விஜயகாந்த், தமிழ் சினிமாவில் கோலோச்சி, பிறகு அரசியலிலும் எதிர்க்கட்சித் தலைவர் வரை உயர்ந்திரு க்கிறார். தமிழ் சினிமாவில், பல அவமானங்கள், ஏச்சு பேச்சுகளைத் தாண்டி சாதித்துக் காட்டிய விஜயகாந்த், எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவுக்குப் பிறகு அரசியலில் நுழைந்த ஒரு திரை நட்சத்திரமாக கோலோச்சி இருபெரும் திராவிட கட்சிகளை மிரள வைத்தார். விஜயகாந்த் பாணியில், தனது திரைப்பயணத்தின் துவக்க காலத்தில் விஜய்யும் பல அவமானங்களை சந்தித்துள்ளார். துவக்க காலத்தில் செந்தூரப்பாண்டி திரைப்படத்தில், விஜயகாந்திற்கு தம்பியாக நடித்து பட்டிதொட்டி எங்கும் சென்று சேர்ந்தார் விஜய்.
இப்படியாக, விஜயகாந்த்திற்கும் விஜய்க்குமான பந்தம் அண்ணன் தம்பி உறவாகவே இருக்கிறது. கடந்த 2023ம் ஆண்டு விஜயகாந்த் மறைந்தபோது, அவருக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற விஜய், சில நொடிகள் உறைந்துபோய் விஜயகாந்த்தைப் பார்த்து அழுததே அதற்கு சாட்சி.. இந்த நிலையில்தான், விஜயகாந்த் பிறந்தநாளில், அவர் பிறந்த மண்ணில் விஜய் மாநாட்டை நடத்துவது கவனம் பெற்றுள்ளது. மாநாட்டுத் தேதியில் மாநாட்டு மேடையில் விஜயகாந்த்திற்கு விஜய் புகழாரம் சூட்டுவாரா, மரியாதை செய்வாரா என்று விஜயகாந்த் ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
கடந்த 2005ம் ஆண்டு விஜயகாந்த் நடத்திய மாநாட்டுத் திடல், சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்தது. சுமார் இரண்டரை லட்சம் இருக்கைகள் போடப்பட்ட நிலையில், உட்கார இடமில்லாமல், மாநாட்டுப் பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர். மொத்தம் 25 லட்சம் பேர் கலந்து கொண்ட நிலையில், அது உலக சாதனையாகவும் கூறப்படுகிறது.
அந்தவகையில், மதுரை மாநாட்டு தேதியை த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளது, அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என ஆதரவு தெரிவித்து அக்கட்சியினர் சுவரொட்டிகளை ஒட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.
மதுரை மாநாட்டை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் திட்டமிட்டிருக்கும் நிலையில், மாநாட்டு வேலைகளில் பரபரப்பாகியுள்ளனர் தவெகவினர். தமிழக அரசியல் களத்தில் மதுரை மண்ணுக்கென தனி இடம் இருக்கும் நிலையில், விஜய்யின் மதுரை மாநாடு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.ிஜ்