அரசு அலுவலகங்களில் தீபாவளி வசூல் நடைபெறுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புப் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
தீபாவளியை முன்னிட்டு அரசு அலுவலங்களில் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கையாடல் அதிக அளவில் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து டாஸ்மாக், நகராட்சி, போக்குவரத்து, ஆவின் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, நெல்லை, திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத பணத்தையும், ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று கோவையில் உள்ள மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய போது, மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்த ஆய்வாளரிடம் இருந்து 83 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதேவேளையில் பாபு நெஞ்சு வலிப்பதாக கூறியபோது அதிகாரிகள் நம்பாததால், உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என உடன் பணியாற்றும் ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.
சென்னையில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியியல் அலுவலகம், அம்பத்தூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், ஆவடி நகராட்சி உள்ளிட்ட பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். சென்னையில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இப்படி தமிழகம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் 44 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக வேலூர் ஆவின் பொதுமேலாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 15 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.