தமிழ் சினிமாவுக்கும், அரசியலுக்கும் எப்போதுமே ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கும். ஒன்று, முக்கிய நடிகர்களாக இருப்பவர்கள் ஏதேனும் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக தங்களை முன்னிறுத்துவார்கள். மற்றொன்று துணிச்சலோடு கட்சி தொடங்கி தீவிர அரசியலில் இறங்குவார்கள். இதில் தீவிர அரசியலுக்கான பாதையை தேர்வு செய்திருக்கும் விஜய், தன் அரசியல் அறிவிப்பை வெளியிடுவாரா என்ற கேள்விதான், தற்போது தமிழகத்தின் பேசுபொருளாகியிருக்கிறது.
ஏழை மக்களின் பசி போக்க விலையில்லா விருந்தகம், உயிர் காக்க குருதியகம் போன்ற சமூக செயல்பாடுகளைத் தொடர்ந்து, மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய். திரைத்துறையை கடந்து நடிகர்கள் தங்களை பிரபலப்படுத்த செய்யும் வழக்கமான ஒன்று எனக்கூறினாலும், அதை சட்டமன்றத் தொகுதி வாரியாக செய்ய திட்டமிட்டிருப்பதுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஆம், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்தித்து உதவித்தொகை வழங்கும் இந்நிகழ்வு, அவரின் தீவிர அரசியல் வருகையின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால் அரசியலுக்கான அடித்தளத்தை அவர் 15 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டார். படம் வெளியாகும்போது கொடி கட்டி, போஸ்டர் ஒட்டி கொண்டாடும் ரசிகர் கூட்டத்தை, 2009ஆம் ஆண்டு மக்களுக்கு சேவை செய்யும் இயக்கமாக மாற்றினார் விஜய். ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கமானது.10 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் செயல்பாடுகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்படைந்திருக்கிறது.
காவலன் : 2011ஆம் ஆண்டு காவலன் பட விவகாரத்தில் தொலைக்காட்சி உரிமம் பெறுவதில் ஏற்பட்ட நெருக்கடிதான், விஜய் முதலில் சந்தித்த பெரும் சிக்கல். நெருங்கிய நட்பு வட்டாரங்கள் மூலம் பிரச்னையை சரி செய்த விஜய், அதன் பின்னரே மக்கள் இயக்கத்தின் பணிகளை தீவிரப்படுத்தினார்.
துப்பாக்கி : 2012ஆம் ஆண்டில் உருவான துப்பாக்கி படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்ததாக பிரச்னை எழுந்தது. படம் வெளியாவதில் நெருக்கடி ஏற்பட்டதால் மீண்டும் சிக்கலுக்குள்ளானார் விஜய்.
தலைவா : துப்பாக்கி படத்தின் தாக்கம் ஓய்வதற்குள் 2013ஆம் ஆண்டு உருவான தலைவா படத்துக்கும் பிரச்னை ஏற்பட்டது. தலைவா படத்தின் டைட்டிலுக்கு கீழ், Time to Lead என ஆங்கிலத்தில் குறிப்பிட்ட வாசகம் பேசுபொருளானது. அத்துடன் அப்படத்திற்காக நடத்தப்படவிருந்த பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிகழ்வு சர்ச்சைக்குள்ளானது.
கத்தி : தலைவா படத்தினால் உருவான அதிர்வலைகள் ஓய்வதற்குள், அடுத்த சர்ச்சையில் சிக்கியது விஜய்யின் கத்தி திரைப்படம். இது இலங்கையைச் சேர்ந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவானது என்பதால், அதை வெளியிட அரசியல் மற்றும் இயக்கம் சார்ந்த அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மெர்சல் : கத்திக்கு பின் வெளியான மெர்சல் படத்தில், ஜிஎஸ்டி குறித்த வசனத்தால் கொந்தளித்த பாஜகவினர், அப்படத்துக்கு எதிராக போர்க்கொடியை உயர்த்தினர். இப்படி, படத்துக்கு படம் விதவிதமான பிரச்னைகளை சந்தித்து வந்த விஜய், இவற்றுக்கு இடையே அரசியல் செயல்பாடுகளையும் தொடர்ந்து கொண்டிருந்தார்.
விஜய்யின் படங்கள் சந்திக்கும் பிரச்னைகளும், வெளியீட்டில் எழும் சிக்கல்களும்! மொத்த லிஸ்ட்!
மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்காமல், மக்கள் தலைவனாக முடியாது என்பதை அறிந்த விஜய், நேரடியாகவோ மறைமுகமாகவோ சமூக பிரச்னைகளுக்கு கருத்து தெரிவித்து வருகிறார். உதாரணமாக, நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார் நடிகர் விஜய். அதுமட்டுமின்றி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருடனான சந்திப்பு என, தன் அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொண்டே இருந்தார். அந்த வரிசையில், தன் படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில், குட்டிக் கதைகள் மூலம் தனது பெரும் அரசியலை அழகாக பேசுவதை, விஜய் வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனால், விஜய்யின் ஓவ்வொரு செயல்பாடுகளும் உற்று நோக்கப்படுகின்றன.
2021ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், சைக்கிளில் சென்று வாக்களித்த நிகழ்வு பேசுபொருளானதை உதாரணமாகச் சொல்லலாம். இப்படி, அரசியல் களத்தில் அதிரடி காண்பித்துவரும் விஜய், ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் ரசிகர்களை போட்டியிட அனுமதித்தது, பரப்புரையின்போது இயக்க கொடியை பயன்படுத்த கூறியது என அரசியலில் தடம் பதிக்க அழுத்தமாக நடவடிக்கைகளை தொடங்கிவிட்டார். இதன் நீட்சியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்க உத்தரவிட்டது வரை, விஜய்யின் கள அரசியல் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் தற்போது மாணவர்களை நோக்கி விஜய்யின் பார்வை விழுந்திருப்பது, இளம் வாக்காளர்களை நோக்கி வீசப்பட்ட அம்பாகவே பார்க்கப்படுகிறது. இது அவரது அரசியல் பயணத்துக்கான அழுத்தமான அச்சாணி என்றே கூறப்படுகிறது.