தமிழ்நாடு

சென்னையில் விசிக பிரமுகர் வெட்டிக்கொலை: முன்விரோதம் காரணமா?

சென்னையில் விசிக பிரமுகர் வெட்டிக்கொலை: முன்விரோதம் காரணமா?

webteam

சென்னையில் விசிக பிரமுகரை வெட்டிய மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

சென்னை தண்டையார்பேட்டை வீராக்குட்டி தெருவைச் சேர்ந்தவர் கேசவன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கேசவன் நடந்து சென்ற போது, அவரை வழிமறித்த  10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்தகும்பல் அங்கிருந்த வாகனங்களையும் நொறுக்கிச் சென்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தகவலிறிந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த கேசவனை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அவர் அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே அதேப் பகுதியைச் சேர்ந்த மதன் என்பவர் அனுமதியின்றி மது விற்பனை செய்து வந்ததாகவும், இது குறித்து காவலருக்கு கேசவன் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கிடையில் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் இந்த கொலை நடந்துள்ளதால் மதன் மீது சந்தேகம் வலுத்துள்ளது.

இதனால் கேசவனின் உறவினர்கள் மதனின் வீட்டை அடித்து நொறுக்கினர். விசிக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதால் பதற்றத்தை தணிக்க அப்பகுதியில் அதிகளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.