தமிழ்நாடு

சுற்றுலா பயணிகளை வழிமறித்து அருகில் வந்து அச்சுறுத்தும் "படையப்பா" - வைரலாகும் வீடியோ

webteam

கேரளா மாநிலம் மூணாறு நெய்மங்காடு எஸ்டேட் பகுதியில் ’படையப்பா’ என்ற கொம்பன் காட்டு யானை சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை வழிமறித்து அருகில் மிக அருகில் வந்து அச்சுறுத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான மூணாறில் படையப்பா என்றழைக்கப்படும் கொம்பன் காட்டு யானை மிகவும் பிரபல்யம். பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்காத இந்த காட்டு யானையின் நடமாட்டம் சர்வ சாதாரணமானதாகி உள்ளது. இரவு, பகல் என்று பாராமல் வீதியுலா வரும் படையப்பா, கடைகளில் உணவுப்பொருட்களை உரிமையாய் எடுத்து திண்பது தொடர்கிறது.

இந்நிலையில் மூணாறு, நெய் மங்காடு எஸ்டேட் பகுதியில் இரவு வெளிவந்த படையப்பா, சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை வழி மறித்தது. அதை சுற்றுலாப் பயணி ஒருவர் தனது காரில் இருந்து படம் பிடித்துள்ளார். ஒவ்வொரு வாகனத்திற்கு அருகிலும் சென்று வாகனத்தை தொட்டுப் பார்த்து பின்னர் வழிவிட்ட படையப்பா, இறுதியாக வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவரின் வாகனத்திற்கு அருகில் மிக அருகில் வந்து தனது நீண்ட கொம்பைக் காட்டி படபடப்பை ஏற்படுத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாதுவான படையப்பாவின் குணம் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் எனவும், அதை வனத்திற்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.