கோவையில் இருவேறு இடங்களில் காட்டு யானைகள் குட்டியுடனும், ஒற்றையாகவும் ஊருக்குள் வந்து திரும்பி செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கோவை மாவட்டம் மேற்கு மலைத்தொடர்ச்சியில் அமைந்திருக்கிறது மருதமலை முருகன் கோயில். ஆனைகட்டி பகுதியிலிருந்து வரும் யானைகள் மருதமலை முருகன் கோயிலுக்கு செல்லும் படிக்கட்டு வழியில் கடந்து தொண்டாமுத்தூர் வனப்பகுதிக்கு சென்று வருகிறது. இந்நிலையில் அதிகாலை இந்தக் கோயில் செல்லும் படிக்கட்டுகளில் மூன்று பெரிய யானைகளும், ஒரு குட்டி யானையும் வலசைப்பாதையை கடக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. படிக்கட்டுகள் வழியாக சாமி தரிசனம் செய்யச் செல்லும் பக்தர்கள் யானை எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் கடக்கலாம், எனவே கவனமாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் மருதமலை அடிவார பகுதியில் யானைகள் வந்தால் மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வண்ணம் வனத்துறையின் சார்பாக சைரன் பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல், மாங்கரை அடுத்த கணுவாய் பகுதியில் செங்கல் சூளையில் ஒற்றை யானை உலா வரும் காட்சிகள் பரவி வருகிறது. இரண்டும் வெவ்வேறு வன சரகத்திற்குட்பட்ட பகுதிகளாக இருந்தாலும், யானைகள் உலா வரும் காட்சிகள் பார்ப்பவர்களை கவர்வதாக உள்ளது.