தமிழ்நாடு

குடும்பத்தினரை சந்திக்க கைதிகளுக்கு தடை : வீடியோ காலில் தந்தையுடன் கண்கலங்கி பேசிய மகள்

webteam

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சிறைவாசிகளை சந்திக்க உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாட்ஸ் ஆப் வீடியோ காலிங்கில் தனது மகளுடன் சிறைவாசி பேசிய மனதைக் கலங்கடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்தும் வரும் நிலையில் சிறையில் இருந்த கைதிகள் சிலருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 52 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ள கைதிகளை அவர்களது குடும்பத்தார் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடும்பத்தாருடன் பேச மாற்று ஏற்பாடுகளைச் செய்து தருமாறு கைதிகள் சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து தமிழ்நாடு சிறைத்துறை 58 ஸ்மார்ட் போன்களை வாங்கி கைதிகள் வீடியோ கால் மூலம் குடும்பத்தாருடன் பேசும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் தான் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கைதிகள் ஒரு நாளுக்கு 5 முதல் 7 நிமிடங்கள் வீதம், மாதத்திற்கு 7 முறை பேசிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கைதிகள் பேசும் எண்ணிற்கு உறவினர்கள் யாரும் திருப்பி அழைக்க முடியாது. அப்படி வீடியோ கால் வசதி மூலம் கைதி ஒருவர் தன் மகளுடன் பேசிய காணொலி வெளியாகியுள்ளது. கண்ணீர் வடிந்த கண்களோடு கைதியின் மகள் பேசிய வீடியோ பலரையும் கலங்கடிக்கும் விதமாக உள்ளது.