தமிழ்நாடு

“குற்றச்சாட்டு அல்ல.. உண்மை என்றுதான் சொல்கிறேன்”- ஆடியோ குறித்து வெற்றிவேல் பேட்டி

“குற்றச்சாட்டு அல்ல.. உண்மை என்றுதான் சொல்கிறேன்”- ஆடியோ குறித்து வெற்றிவேல் பேட்டி

Rasus

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீர்வு கிடைக்கவே ஆடியோ வெளியாகி உள்ளது என டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணிடம் உரையாடுவது போன்ற ஆடியோ ஒன்று வாட்ஸ் அப்பில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், ‘உதவி கேட்டு வந்த தன்னுடைய பெண்ணை கர்ப்பமாக்கி வீட்டீர்கள். இப்போது கலைக்க சொல்கிறீர்கள். பணம் எதுவும் வாங்காமல் எப்படி கலைப்பது” என்று அந்தப் பெண் பேசுவது போல் உள்ளது. அந்த ஆடியோவில் எந்த ஒரு இடத்திலும் தமிழக அமைச்சர் என்றோ, ஜெயக்குமார் என்றோ குறிப்பிடவில்லை. அந்த ஆடியோவில் உள்ள குரல் அமைச்சர் ஜெயக்குமார் போல் உள்ளது என்ற காரணத்திற்காக இந்த ஆடியோவில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார்தான் என்பது போல் செய்தி பரவி வருகிறது. இந்த ஆடியோ குறித்து எந்த முழு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

வாட்ஸ் அப்பில் வெளியான ஆடியோ குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னை நேரடியாக எதிர்க்க திராணி இல்லாதவர்கள் ஆடியோவை போலியாக தயார் செய்துள்ளனர். போலியாக ஆடியோவை தயார் செய்து வெளியிட்டோர் பின்னணியில் சசிகலா, டிடிவி குடும்பத்தினர் உள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது களங்கம் கற்பிக்க வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள். இதற்கு முன்பும் என்மேல் அவதூறு பரப்ப இதுபோன்ற முயற்சிகள் நடந்துள்ளன. சிறுநரிகளின் கூட்டத்திற்கு அஞ்சுகிறவர்கள் நாங்கள் அல்ல. 

டி.ஜெயக்குமார் என்று உலகத்தில் நான் ஒருவன்தான் இருக்கிறேனா?. போலி ஆடியோ பின்னணியில் இருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக கண்டிப்பாக புகார் அளிப்பேன். வழக்கு தொடர்வேன்” என்றார்.

இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன் ஆதரவாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான வெற்றிவேல், “ பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீர்வு கிடைக்கவே ஆடியோ வெளியாகி உள்ளது. ஆனால் நாங்கள் ஆடியோவை ரீலிஸ் செய்யவில்லை. நான் குற்றச்சாட்டு கூறவில்லை. உண்மை என்றுதான் சொல்கிறேன். அமைச்சர் ஜெயக்குமார் போல வேறு சில அமைச்சர்களும் இருக்கின்றனர். அவர்களும் திருந்த வேண்டும்.  திண்டுக்கல்லில் தனியார் ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆதாரம் இல்லாமல் எதுவும் பேச மாட்டேன். தேவைப்பட்டால் அந்த பெண்ணிற்கோ, குழந்தைக்கோ ஆபத்து வந்தால் போராட்டம் நடத்தப்படும்.

தமிழக ஆளுநர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிரச்னையை சந்திக்க வேண்டும். அத்துடன் தனது தவறை உணர்ந்து செயல்பட வேண்டும். பதவியை ஜெயக்குமார் ராஜினாமா செய்தால்தான் சம்பந்தப்பட்ட பெண் புகார் அளிப்பார். ஜெயலலிதா பெண்கள் விவகாரத்தில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார். பல மாதங்களுக்கு முன் முதல்வர் மீது நான் கூறிய குற்றச்சாட்டு தற்போது சிபிஐ வரை சென்றுள்ளது” என தெரிவித்துள்ளார்.