தமிழ்நாடு

சென்னையில் அதி கனமழை தொடரும் - வானிலை மையம் அறிவிப்பு

Sinekadhara

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. 

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்த மண்டலமாக உருவாகியிருப்பதால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்துவருகிறது. இந்த மண்டலமானது வலுபெற்று மாமல்லபுரம் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவிலிருந்தே சென்னை உள்ளிட்ட கரையோர மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. 

மேலும், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல், நாளை நீலகிரி, கோவை, கன்னியாகுமரியில் கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதுவரை 3 இடங்களில் அதி கனமழையும், 23 இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.