தமிழ்நாடு

எஸ்.பி. வேலுமணி வீட்டில் சோதனை: முன்கூட்டியே தகவல் வெளியானதா என விசாரணை?

எஸ்.பி. வேலுமணி வீட்டில் சோதனை: முன்கூட்டியே தகவல் வெளியானதா என விசாரணை?

kaleelrahman

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்த இருந்தது முன்கூட்டியே வெளியானதா? என துறைரீதியிலான விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான 60 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சென்னை மாநகராட்சி மற்றும் கோயம்புத்தூர் முனிசிபல் கார்ப்பரேஷன் ஆகியவற்றில் 811 கோடி ரூபாய் டெண்டர் விவகாரத்தில் ஊழல் செய்திருப்பதாக இந்த சோதனை நடைபெற்றது. சோதனை ஆரம்பித்த உடனேயே கோயம்புத்தூரில் உள்ள எஸ்பி.வேலுமணியின் வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் வாகனத்தில் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சோதனை நடந்தால் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று முன்கூட்டியே தெரிந்து அதிமுகவினர் வந்தது போன்றும், அவர்களுக்கு உணவு உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதேபோன்று சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் பெரும்பாலும் தங்காத எஸ்.பி.வேலுமணி நேற்று முன்தினம் இரவே சட்டமன்ற விடுதியில் வந்து தங்கியது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு வரும்போது, தனது ஆதரவாளர்கள் மூலம் முன்கூட்டியே திட்டமிட்டு கோஷம் எழுப்பவும் திட்டமிட்டு இருந்ததாக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. எனவே லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையை முன்கூட்டியே வெளிப்படுத்திய போலீசார் யார் என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் துறைரீதியிலான விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

முன்கூட்டியே சோதனை நடத்தப்படுவது தெரியவந்ததால் ஆவணங்கள் மற்றும் பணங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு எழுந்துள்ளது.