வேலூரில் நண்பர்கள் விளையாட்டாக கிணற்றில் தள்ளியதில் தண்ணீரில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சம்பந்திக்கும்பம் கிராமத்தை சேர்ந்தவர் மவீன். பெங்களூருவில் தச்சராக பணியாற்றிய இவர் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துள்ளார். நண்பர்களான சுதர்சன், பவித், ராகுல், கல்யாணகுமார், அருண்குமார், அஜீத்குமார் ஆகியோருடன் மவீன் மது அருந்திவிட்டு கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது போதையில் ஒருவரை, ஒருவர் கிணற்றில் தள்ளிவிட்டு விளையாடியுள்ளனர். அப்போது, கிணற்றில் விழுந்த மவீன் கரையேறவில்லை. மதுபோதையிலிருந்த நண்பர்கள் மவீனை கவனிக்காமல் வீடு திரும்பியுள்ளனர். இந்தச் சம்பவம் அனைத்தும் மவீனின் செல்போனில் பதிவாகி உள்ளது.
இந்த நிலையில், இன்று காலை கிணறு அருகிலிருந்து மவீனின் செல்போன் கண்டெடுக்கப்பட்டது. அதிலிருந்த வீடியோவை பார்த்த பிறகே மவீன் கிணற்றில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மவீனின் நண்பர் அருண்குமார் கைது செய்யப்பட்டார். மேலும் தலைமறைவாகவுள்ள மேலும் 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.