தமிழ்நாடு

வறுமையால் மணல் அள்ளச்சென்றவர் மாட்டுவண்டியில் சிக்கி உயிரிழப்பு

வறுமையால் மணல் அள்ளச்சென்றவர் மாட்டுவண்டியில் சிக்கி உயிரிழப்பு

webteam

காட்பாடி அருகே குடும்ப வறுமை காரணமாக மணல் அள்ளச்சென்ற இளைஞர், மாட்டு வண்டியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன்-உமா தம்பதியின் மூத்த மகன் நரேந்திரன். 12ஆம் வகுப்பு வரை மட்டுமே ‌படித்துள்ள இவர், ஏழ்மை காரணமாக கிடைத்த வேலைகளைச் செய்து குடும்பத்திற்கு உதவியாக இருந்து வந்தார். பாலாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள், ஒரு வண்டிக்கு மணல் அள்ளினால் 200 ரூபாய் தருவதாகக் கூறி கடந்த 29ஆம் தேதி நரேந்திரனை அழைத்துச் சென்றுள்ளனர். 

இரவில் மணல் அள்ளிக்கொண்டு வந்து கொண்டிருந்த அவர், நிலை தடுமாறி கீழே விழுந்து மாட்டுவண்டி சக்கரத்தில் சிக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நரேந்திரனை காப்பாற்றாமல், உரிமையாளர்கள் மாட்டு வண்டியை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் பார்த்து தகவல் தெரிவித்ததை அடுத்தே, நரேந்திரன் உயிரிழந்தது தெரியும் என உறவினர்கள் கூறுகின்றனர். 

மணல் கொள்ளையை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி, நடவடிக்கை எடுக்கப்படும் என காட்பாடி காவல் ஆய்வாளர் புகழ் தெரிவித்துள்ளார்.