வேலூரில் ஆபத்தை உணர்ந்தும் கழுத்தளவு நீரில் இறந்தவரின் சடலத்தை மக்கள் சுமந்து செல்லும் அவல நிலை நிலவுகிறது. ஆற்றை கடக்க மேம்பாலம் அமைத்து தர கோரிக்கை அப்பகுதி கிராம மக்கள் விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் அணைகட்டு தொகுதிக்குட்பட்ட ஒடுக்கத்தூர் பேரூராட்சியில் அமைந்துள்ளது கல்லுட்டை கிராமம். இக்கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கல்லுட்டை கிராமத்திற்கான சுடுகாடு சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உத்திரகாவேரி ஆற்றுக்கு மறு கரையில் அமைந்துள்ளது.
இந்நிலையில், கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால் உத்திரகாவேரி ஆற்றை கடந்து சென்று தான் அடக்கம் செய்ய வேண்டும். பருவமழை காலங்களில் ஜவ்வாது மலைகளில் பெய்யும் மழை நீரின் ஒரு பகுதி உத்திரகாவேரி ஆறு வழியாக பாலாற்றில் கலக்கிறது. இதுநாள் வரை நீர் தேங்காமல் ஓடியதால் கல்லுட்டை கிராம மக்கள் எந்தவித சிரமத்துக்கும் ஆளாகாமல் ஆற்றை கடந்து சடலத்தை அடக்கம் செய்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு உத்திரகாவேரி ஆற்றின் குறுக்கே இருந்த தடுப்பணையின் சுவர் உயர்த்தி கட்டப்பட்டதாலும், தடுப்பணையின் உட்பகுதியில் தூர்வாரப்பட்டதாலும் சுமார் 10 அடிவரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், தற்போது உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துசென்று அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வேறு வழியின்றி கல்லுட்டை கிராம மக்கள் ஆபத்தான நிலையில் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்து வருகின்றனர். பெண்கள் செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்துமே ஆற்றுக்கு மறு கரையிலேயே இருந்து செய்வதாக வேதனை தெரிவிக்கின்றனர். ஆறு மாதங்களுக்கு இந்த நிலை நீடிப்பதால் சுடுகாட்டுக்கு செல்ல உயர்மட்ட பாலம் அமைத்துதர வேண்டும் என கல்லுட்டை கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.