பாடம் நடத்துவதில் வித்தியாசமான முறையை குடியாத்தத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் பின்பற்றி வருகிறார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ராஜாகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் தெருவிளக்கு கோபிநாத். தெருவிளக்கு என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி மாலைநேர வகுப்புகளை கட்டணமின்றி எடுத்து வரும் இவர், பள்ளிக்கு தினமும், மாணவர்கள் அணியும் சீருடையிலேயே வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இது ஆசிரியர்கள், மாணவர்களிடையேயான தூரத்தை குறைக்கும் என்று கூறும் அவர், எந்த பாடம் எடுக்கிறாரோ, அதற்குரிய வேடத்தில் சென்று பாடம் எடுக்கிறார். அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தனது குழந்தையையும் அதே பள்ளியில் சேர்த்துள்ள கோபிநாத், பாடம் சாராத சிலம்பம், பறையிசை, ஓவியம், நடனம் போன்ற கலைகளையும் கற்றுத்தந்து மாணவர்களை ஊக்குவிக்கிறார். இவரது அர்ப்பணிப்பை கண்டு 20க்கும் மேற்பட்ட தனியார் அமைப்புகள் இவருக்கு விருதுகளை வழங்கியுள்ளன.