வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் செயல்பட்டு வரும் தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் தோல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத தோல் கழிவுநீரை, பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கை பயன்படுத்தி வாணிடெக் நிர்வாகத்தினர் அத்துமீறி திறந்து விடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் பாலாற்றில் செல்லும் தண்ணிர் மாசுபடுவதாகவும், நுரைபொங்கி துர்நாற்றம் வீசுவதாகவும் கூறி வடச்சேரி, பாப்பனப்பள்ளி, சம்மந்திகுப்பம் மற்றும் நடுபட்டறையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாணியம்பாடி வளையாம்பட்டு பகுதியில் செயல்படும் வாணிடெக் ஆலை முன்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில், கழிவுகள் ஆற்றில் கலப்பதற்கு எதிராக பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து போலீஸார் மற்றும் ஆலை நிர்வாகத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் போராட்டம் தொடர்கிறது. இதனால் 12 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்யலாம் என்ற விவசாயிகளின் கனவு வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.