Ashokan
Ashokan pt desk
தமிழ்நாடு

வேலூர்: திமுக பிரமுகர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை – பின்னணி என்ன?

webteam

செய்தியாளர்: ச.குமரவேல்

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவர் வேலூர் மாநகர மாவட்ட திமுக பொருளாளராகவும், இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவராகவும் உள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு வேலூர் கூடுதல் கமிஷனர் பூரணசந்தர் தலைமையிலான நான்கு பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், அசோகனுக்கு சொந்தமான தோட்டப்பாளையம் டிபி கிருஷ்ணசாமி நகர் பகுதியில் உள்ள பிரிண்டிங் பிரஸ் அலுவலகத்தில் காவல்துறை பாதுகாப்புடன் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

Ashokan with minister Duraimurugan

இந்த சோதனையின் போது அலுவலக ஊழியர்கள் மற்றும் அசோகனின் மகன் அரவிந்தன் இருந்துள்ளனர். பணம் ஏதேனும் இருக்கிறதா என சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் பணம் எதுவும் இல்லாத நிலையில் வங்கி தொடர்பான ஆவணங்களை கணினி மூலம் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு சோதனை முடிந்து அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். இதில் பிரின்டிங் பிரஸ்-ன் வங்கி தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி சம்மன் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அசோகனின் மகன் அரவிந்தன் கூறுகையில்... “முதலில் பணம் ஏதேனும் இருக்கிறதா என்று சோதனையிட்டார்கள். பணம் எதுவும் கிடைக்காத நிலையில், வங்கி ஆவணங்களை மட்டும் சரிபார்த்து சென்றார்கள்” என்று கூறினார்.