திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும், வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் மீது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கதிர் ஆனந்த் வீட்டில் கடந்த மாதம் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது முக்கிய ஆவணங்களும், 10 லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பிறகு இம்மாதம் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையின் போது துரைமுருகனுக்கு நெருங்கிய நண்பரும் திமுக பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி வீட்டிலிருந்து 11 கோடியே 48 லட்ச ரூபாய் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்ததாக பூஞ்சோலை சீனிவாசன் வருமான வரித்துறையினரிடம் கூறியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை அடுத்து, தேர்தல் செலவின உதவி அலுவலர் தலைமையில், காட்பாடி காவல் நிலையத்தில் கதிர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்ய மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கதிர் ஆனந்த் மனுத் தாக்கல் செய்தபோது குறிப்பிட்டிருந்த பணத்தை விட அதிகமாக வைத்திருந்ததாகவும், தாக்கல் செய்த மனுவில் பொய்யான தகவல்களை அளித்ததாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து காட்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர், ஆய்வாளர் புகழ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்வது குறித்து நீதிபதி உடன் ஆலோசனை நடத்தினர். அதனையடுத்து கதிர் ஆனந்த் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திமுக பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன், அவரது சகோதரியின் கணவர் தமோதரன் ஆகியோர் மீது தலா இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில், “வேலூர் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்தின் இல்லம் உள்ளிட்ட 8 இடங்களில் தேர்தலில் பயன்படுத்துவதற்காக அதிக அளவில் பணம் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக மார்ச் 29ம் தேதி தேர்தல் செலவின அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தேர்தல் செலவின கண்காணிப்பிற்காக அமைக்கப்பட்ட குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உரிய அனுமதி பெற்று நடத்தப்பட்ட சோதனையில் 19 லட்சத்து 57 ஆயிரத்து பத்து ரூபாய் கதிர் ஆனந்த் வீட்டில் இருந்துள்ளது. ஆனால், வேட்பு மனுத் தாக்கலில் அவர் ரூ9 லட்சம் மட்டுமே வீட்டில் இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதனால், எஞ்சியுள்ள 10 லட்சத்து 57 ஆயிரத்து பத்து ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் ஒன்றாம் தேதி தாமோதரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது 11 கோடியே 48 லட்சத்து 51 ஆயிரத்து எண்ணூறு ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், பூஞ்சோலை சீனிவாசன் என்பவர் வருமான வரித்துறையினரிடம் தொடர்பு கொண்டு மேற்படி தொகை தன்னைச் சார்ந்தது எனவும், வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதாக வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.
கண்காணிப்பு குழுவினரால் குடியிருப்பு மற்றும் கல்லூரியில் தணிக்கை செய்ய முற்பட்ட போது தடுக்கப்பட்டதனால் அங்கிருந்த பணம் கண்காணிப்பு கேமராக்களை அகற்றி கட்சி பிரமுகர் வீடுகளுக்கு மாற்றப்பட்டிருக்கலாம். கணக்கில் வராத பணம் வரும் மக்களவைத் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதற்காக வைத்திருந்துள்ளார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.