குடியாத்தம் அரசு மருத்துவமனை புதிய தலைமுறை
தமிழ்நாடு

வேலூர் | அரசுப் பள்ளியில் மாணவியை கடித்த பாம்பு.. கலக்கத்தில் பெற்றோர்!

அரசுப் பள்ளி கழிவறையில் மாணவியை பாம்பு கடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

PT WEB

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஓலக்காசி அரசு உயர்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் படிக்கும் ஆலாம்பட்டரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவஞானம் என்பவரது மகள் பூவிகா இன்று காலை பள்ளி வளாகத்துக்குள் உள்ள கழிவறைக்கு சகமாணவிகளோடு சென்றுள்ளார். அப்போது கழிவறையில் பதுங்கி இருந்த பாம்பு பூவிகாவின் காலில் கடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் மாணவி பூவிகா

இதையடுத்து பூவிகாவை அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி வளாகத்துக்குள் மாணவியை பாம்பு கடித்த சம்பவம் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வகுப்பறைகளில் தூய்மை நிலையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்ன பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள், “சிறுமிக்கு சிறிய அளவே விஷம் ஏறியுள்ளது. அதனை முறிக்கும் வகையில் விஷ முறிவு மருந்து கொடுக்கப்பட்டு தற்போது சிறுமி நலமுடன் உள்ளார். ஆறு மணி நேரத்திற்கு அவரை நாங்கள் கண்காணித்து வருகிறோம். தற்போதைக்கு அச்சப்பட வேண்டிய அளவிற்கு எதுவும் இல்லை” என தெரிவித்துள்ளனர்.