தமிழ்நாடு

சுர்ஜித் பெயரை பூக்களால் அலங்கரித்து 108 விளக்கேற்றி பிரார்த்தனை 

சுர்ஜித் பெயரை பூக்களால் அலங்கரித்து 108 விளக்கேற்றி பிரார்த்தனை 

webteam

ஜோலார்பேட்டை அருகே மலர்களால் சுர்ஜித் பெயரை அலங்கரித்து விளக்கேற்றி பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி, 47 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. 

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரைக் காப்பாற்றுவதற்கான, அனைத்து முயற்சிகளையும் அரசு முழு வீச்சில் முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து இரண்டாவது இயந்திரம் தற்போது நடுகாட்டுப்பட்டிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்த இயந்திரத்தின் மூலம் துளையிடும் பணி தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டாவது இயந்திரம் முதல் இயந்திரத்தைவிட மூன்று மடங்கு அதிக திறன் கொண்டது. இனிமேல் இறைவன் அருளால்தான் சிறுவனை மீட்க முடியும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர். ஆகவே தமிழகம் முழுவதும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே இன்று ஜோலார்பேட்டை அருகே உள்ள எஸ் கோடியூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் 108 விளக்குகளை ஏற்றி, சுர்ஜித் பெயரை மலர்களால் அலங்கரித்து சிறப்பு வழிபாடு செய்தனர். சிறுவன் சுர்ஜித்தை காப்பாற்றுவதற்கு அருள் செய்யுமாறு இறைவனை அவர்கள் வேண்டிக் கொண்டதாக குறிப்பிட்டனர்.