தமிழ்நாடு

வேலூரில் 5 மணி அளவிலே பேருந்து நிறுத்தம்: மின் இணைப்பு துண்டிக்கப்படவும் வாய்ப்பு

webteam

வேலூர் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி முதல் போக்குவரத்து வசதியானது நிறுத்தப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

வேலூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் காரணமாக பாதிப்பு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ள இடங்களான மாங்காய் மண்டி நிக்கல்சன் கால்வாய், கன்சால்பேட்டை, திடீர் நகர், காட்பாடி, குடியாத்தம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது

“நிவர் புயல் கரையை கடந்த பிறகு வேலூர் மாவட்டத்தில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் இன்று மாலை மின் இணைப்பு துண்டிக்க வாய்ப்புள்ளது. அரசு அதிகாரிகள் பொது மக்கள் செல்போன்களை முழுவதுமாக சார்ஜ் செய்துகொள்ள வேண்டும். அதே போல் அனைத்து பேருந்து சேவைகளும் இன்று மாலை 5.00 மணி முதல் நிறுத்தப்படும். ஒவ்வொரு தாலுகாவுக்கும் தலா இரண்டு ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து அரசு அலுவலர்களும் அலுவலகத்தில் தயார் நிலையில் இருக்கவும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

13 முகாம்களில் 3000 பேர் தங்க வைக்கப்படுவதற்கான முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. மின்மோட்டார்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. வீட்டிலோ அல்லது சாலையிலோ மின்கம்பங்கள் பழுதானாலோ அல்லது மின்கசிவு ஏற்பட்டாலோ நேரடியாக மக்கள் சரி செய்யக்கூடாது. மின்வாரிய அலுவலகங்களை தொடர்பு கொள்ள வேண்டும். மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்கள் எந்நேரமும் அலுவலகத்தில் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மின்வாரிய தொடர்பு எண்கள்:

உதவி பொறியாளர் மற்றும் மின்துறை சார்ந்த எண்கள் :94458 55002, 63802 83535, 0416 2207950,

மின்வாரிய இலவச அழைப்பு எண்:
1800 425 8912

ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை இலவச அழைப்பு எண்: 0416-2258016, 1077