தமிழ்நாடு

“தேர்தல் ரத்து என்பது ஜனநாயக படுகொலை” - துரைமுருகன் ஆதங்கம்

“தேர்தல் ரத்து என்பது ஜனநாயக படுகொலை” - துரைமுருகன் ஆதங்கம்

webteam

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட காரணத்தால் இந்த அதிரடி உத்தரவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. முன்னதாக, கடந்த மாதம் 29 மற்றும் 30ஆம் தேதிக‌ளி‌ல் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையின்போது கதிர் ஆனந்த் வீட்டில் முக்கிய ஆவணங்களும், 10 லட்ச ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.  அதன் பிறகு இம்மாதம் 1 மற்றும் 2ஆ‌ம் தேதிகளில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையின் போது துரைமுருகனுக்கு நெருங்கிய நண்பரும் திமுக பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் ‌சகோதரி வீட்டிலிருந்‌து 11 ‌கோடியே 48 ‌லட்ச ரூபாய் பணம் கட்டுக்கட்டாக பறிமுதல்‌ செய்யப்பட்டது‌. இதனால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தன. இந்நிலையில் தான் தேர்தலை ரத்து செய்து இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய துரைமுருகன், “வேலூரில் தேர்தலை ரத்து செய்திருப்பது ஒரு ஜனநாயக படுகொலை. எதிர்கட்சிகளை தேர்தலில் பயமுறுத்துவதற்காக எடுக்கப்பட்டிருக்கும் ஒரு நடவடிக்கை. இதுவே என்னுடைய பார்வை. மோடி அரசுக்கு முடிவுகட்ட மக்களுக்கு ஒரு சரியான வாய்ப்பு கிடைக்கும்” என தெரிவித்தார்.