தமிழ்நாடு

வேலூர்: மேய்ச்சலுக்கு போன மாட்டை தேடிச் சென்ற தம்பதியினர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

வேலூர்: மேய்ச்சலுக்கு போன மாட்டை தேடிச் சென்ற தம்பதியினர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

kaleelrahman

மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை பிடித்துவரச் சென்ற தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். பன்றிக்கு வைத்த மின்சாரத்தில் சிக்கி உயிரிழந்தார்களா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த உள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயபிரகாஷ் (34) அஸ்வினி (26) தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடமேயான நிலையில், மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாடு வீடு திரும்பாததால் கணவன் - மனைவி இருவரும் நேற்று இரவு மாட்டை தேடிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் மாட்டை தேடிச் சென்ற இருவரும் இன்று காலை வரை வீடு திரும்பாததால் அவர்களை உறவினர்கள் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் - மனைவி இருவரும், பசுமாட்டோடு விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்ட அப்பகுதியினர் திருவலம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவலம் காவல் துறையினர் இருவர் உடலை ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் இருவர் மீதும் மின்வேலியில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரது உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விளைநிலங்களை பாதுகாக்க பன்றிக்கு வைத்த சட்டவிரோத மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் நில உரிமையாளர் விஜயகுமாரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.