நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 12 மணிநேர போராட்டத்திற்கு பின்பு தீயணைப்புத் துறையினர் சடலத்தை மீட்டனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள சாமியார் மலை பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவர், ஈரோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் இவர், நேற்று மதியம் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்க்கிய அவரை, நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் நீருக்கடியில் சேற்றில் சிக்கியதால் செய்வதறியாத நண்பர்கள் உடனடியாக குடியாத்தம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் நேற்று இரவு வரை தேடியும் உடல் கிடைக்காததால் தேடுதல் பணியை நிறுத்தி, மீண்டும் இன்று அதிகாலையில் இருந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து 12 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு மாணவன் ஆகாஷை சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து குடியாத்தம் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவன் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.