வேலூரில் 51 ஆண்டுகளுக்குப் பின் பள்ளி மாணவர்கள் சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் செயல்பட்டு வரும் அரசினர் மேல்நிலைப்பள்ளி, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கடந்த 1967-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வந்தது. அப்போது பத்தாம் வகுப்பு ஏ பிரிவில் பயின்றவர்கள் மொத்தம் 32 பேர். பள்ளி படிப்பை முடித்து தங்கள் கனவுகளைத் தேடி இவர்கள் கலைந்துச்சென்று 50 ஆண்டுகளாகிறது. தற்போது 66 வயதை கடந்துள்ள இவர்கள் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா என வெளி மாநிலங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.
தங்கள் பள்ளிக்கால நண்பர்களை ஒரே இடத்தில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா என ஏங்கி வந்த இவர்களின் பல ஆண்டுகால கனவு 'MEET TOGETHER' என்ற நிகழ்ச்சி மூலம் நனவாகியுள்ளது. 32 பேரில் 4 பேர் காலமாகிவிட்ட நிலையில், மீதமுள்ள 28 பேரும் தாங்கள் பயின்ற பள்ளியில் ஒன்றாய் சங்கமித்தனர்.
சுமார் 51 ஆண்டுகளுக்குப்பின் தங்கள் நண்பர்களை ஒரே இடத்தில் சந்தித்த அவர்கள், இத்தனை ஆண்டுகள் கடந்தும், ஒருவொருக்கொருவர் அடையாளம் கண்டு கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தது சற்றே வியப்பை ஏற்படுத்தியது. அத்துடன் அவர்களின் ஆழமான நட்பையும் பிரதிபலித்தது.
பிள்ளைகள், பேர பிள்ளைகள் என தலைமுறைகளை கடந்து ஓய்வு காலத்தில் இருக்கும் இவர்கள், பள்ளி பருவத்தில் தங்களின் தோழமை அனுபவங்களையும் வாழ்க்கையில் தாங்கள் கடந்துவந்த பாதைகளையும் திரும்பிப் பார்த்தனர்.
இந்த தருணத்தில் கேலி, கிண்டல், சிரிப்பு என தங்கள் வயதை தொலைத்து 50 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலேயே அவர்கள் மூழ்கி திளைத்தனர். பின்னர் நீண்ட நாள் ஆசை நிறைவேறிய ஆத்ம திருப்தியுடனும், நெஞ்சில் நீங்கா நினைவுகளுடனும் அவர்கள் ஒருவொரையொருவர் பிரிய மனமின்றி, பிரிந்துச் சென்றனர்.