தமிழ்நாடு

வேலூர்: பட்டாசுகடை விபத்தில் 2 மகன்கள் பலி; விரக்தியில் ரயில்முன் பாய்ந்து தாய் தற்கொலை

Veeramani

வேலூர் மாவட்டம், லத்தேரி பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் தாய் மனமுடைந்து ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியை சேர்ந்த மோகன்(60) லத்தேரி பேருந்து நிலையத்தில் பட்டாசுக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி மதியம் 12.00 மணி அளவில் கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் பட்டாசை வெடித்து காண்பிக்கச்சொன்னதால் மோகன் பட்டாசை வெடித்துள்ளார். அதில் ஏற்பட்ட தீ பொறி கடையில் உள்ள பட்டாசுகள் மீது விழுந்து வெடிக்கத் தொடங்கியுள்ளது. அப்போது மோகனின் இரு பேரன்கள் தனுஜ்(8), தேஜஸ்(7) பயந்து கடைக்குள் ஓடியுள்ளனர். கடைக்குள் ஓடிய பேரன்களை காப்பாற்ற முயன்றபோது மோகனும் கடைக்குள் சிக்கியுள்ளார். அதற்குள் பட்டாசுகள் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டதால் மோகன் மற்றும் அவரது மகள் வழி பேரக்குழந்தைகள் இருவர் என மூவரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் இறந்த சிறுவர்களின் தாய் வித்யா(34) மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை 3.00 மணி முதல் வித்யா வீட்டில் இல்லாததால் பதற்றமான உறவினர்கள் அவரை தேடியுள்ளனர். அப்போது லத்தேரி ரயில் நிலையம் அருகே பெண் சடலம் இருப்பதாக பொது மக்கள் கூறியதை அடுத்து உறவினர்கள் சம்பவ இடத்திற்க்கு சென்று பார்த்த போது இறந்துகிடப்பது வித்யா என தெரியவந்தது. இதனையே சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு மகன்களும், தனது தந்தையும் ஒரே நேரத்தில் உயிரிழந்ததால் மனவேதனையில் இருந்த வித்யா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது. மேலும் வித்யா தனது கணவரை பிரிந்து மகன்களுடன் தனது தந்தை மோகன் வீட்டில் வசித்துவருகிறார் என்றும் கூறப்படுகிறது.