சென்னையின் வெவ்வேறு இடங்களில் வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் தீப்பிடித்து எரிந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஐஸ் ஹவுஸ் ஜவகர் உசேன் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அனீஷ். நேற்றிரவு வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இவருக்குச் சொந்தமான இரண்டு இருசக்கர வாகனமும் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த வாகனத்தின் மீது தண்ணீரை ஊற்றி அணைத்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரது நான்கு சக்கர வாகனமும் தீப் பிடித்து எரிந்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீயை போராடி அணைத்தனர்.
இந்த தீவிபத்து தொடர்பாக மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த போது ஆனந்த் வீட்டில் வாடகைக்கு தங்கி வந்த சுரேஷ் என்பவர் கடந்த 6 மாதமாக வாடகை தர முடியாததால் வாடகை பணத்தை கொடுத்துவிட்டு காரை எடுத்து செல்வதாக கூறி விட்டு சென்றதாகவும், தற்போது காட்பாடியில் இருக்கும் அவரது எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் சொல்லப்பட்டது .இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.