தமிழ்நாடு

காய்கறி விலையும் உயரும் அபாயம்

காய்கறி விலையும் உயரும் அபாயம்

webteam

வாட் வரி உயர்வால் பழங்கள், காய்கறிகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை மாநில அரசு உயர்த்தியுள்ளது. இதனால் காய்கறிகளின் விலை கணிசமாக உயரும் என தெரிகிறது. பொதுமக்கள் அன்றாட பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தும் காய்கறிகள், பழங்கள் பல்வேறு இடங்களில் இருந்து சரக்கு லாரிகள் மூலம் மாவட்டங்களில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து அந்தப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கும் மற்ற இடங்களுக்கும் அவை சாலைப் போக்குவரத்து மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது மாநில அரசு பெட்ரோல், டீசலுக்கான வரியை உயர்த்தியுள்ளதால் காய்கறிகள், பழங்களின் விலை 20 சதவிதம் வரை உயர வாய்ப்புள்ளது. கோயம்பேடு மார்க்கெட் நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி, 22 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால், தக்காளி விலை 26 ரூபாய்க்கு உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக பெட்ரோல், டீசலுக்கான, ‘வாட்’ வரியை, தமிழக அரசு திடீரென உயர்த்தியது, பெட்ரோல் மீதான வாட் வரி 27 சதவீதத்தில் இருந்து, 34 சதவீதமாகவும், டீசல் மீதான வாட் வரியை, 21.43 சதவீதத்தில் இருந்து, 24 சதவீதமாகவும் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.78 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு, 1.76 ரூபாயும் உயர்ந்துள்ளது.