தமிழ்நாடு

வாட்ஸ்அப்பில் விற்பனை... புதிய யுக்தியை கையாளும் விவசாயி

வாட்ஸ்அப்பில் விற்பனை... புதிய யுக்தியை கையாளும் விவசாயி

webteam

தண்ணீர் பற்றாக்குறை, விளைபொருளுக்கு உரிய விலையின்மை போன்ற பல பிரச்னைகள் விவசாயிகளை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் அவர்களுக்கு காலத்துக்கேற்ற புதிய யுக்திகளுடன் நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சுகிறார் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சிறு விவசாயி.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உப்புப்பள்ளம் என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயி திருமூர்த்தி. தென்னை, வாழை, மஞ்சள் ஆகியவற்றை ரசாயனங்கள் இன்றி இயற்கை முறையில் பயிர் செய்த இவருக்கு நண்பர்களது யோசனை திருப்புமுனையாக மாறியது. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் குழுக்களில் உள்ள நண்பர்களுக்கு நேரடியாக விளைபொருட்களை விற்கும் யோசனைதான் அது.

முதலில் தேங்காய் எண்ணெயை செக்கில் ஆட்டி விற்றவர் பிறகு இயற்கை முறையில் விளைந்த மஞ்சள், வாழை விற்பனை என அடுத்தடுத்த படிகளுக்கு முன்னேறினார். ஆரம்பத்தில் பக்கத்து சந்தையில் மட்டுமே விற்றுக்கொண்டிருந்த இவரது பொருட்கள் தற்போது வாட்ஸ்அப், ஃபேஸ்புக் வழியாக திருப்பூர், கோவை, சென்னை ஆகிய நகரங்களுக்கும் செல்கின்றன. விளைபொருட்களை நேரடியாக விற்பதால் குறைந்த விலைக்கு தர முடிகிறது. அதிகம் பேர் வாங்குவதால் நல்ல லாபமும் கிடைக்கிறது என்கிறார் திருமூர்த்தி

சூரிய ஒளி மின்சக்தி பயன்பாடு, சொட்டு நீர்ப்பாசனம் போன்ற முறைகளை பயன்படுத்தி உற்பத்தி செலவை குறைப்பதாக கூறுகிறார் திருமூர்த்தி. கால மாற்றத்திற்கேற்ப அடுத்தடுத்த கட்டங்களுக்கு மாறுவதே விவசாயிகள் தற்போது சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும் என்கிறார்.நஞ்சற்ற பொருட்களை நேரடியாக விற்பதால் பணம் நிறைவது மட்டுமல்ல. மனமும் நிறைகிறது என்கிறார் திருமூர்த்தி. சாகுபடி பரப்பையும், விளைபொருட்களின் விநியோக பரப்பையும் மேலும் மேலும் விரிவாக்குவதே தமது கனவு எனவும் பூரிப்புடன் கூறுகிறார்.