தமிழ்நாடு

லாரிகள் வேலை நிறுத்தம் ! சிரமத்தில் விவசாயிகள்

லாரிகள் வேலை நிறுத்தம் ! சிரமத்தில் விவசாயிகள்

webteam

நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள காய்கறி சந்தைகளுக்கு காய்கறி வரத்து குறைந்து, காய்கறி விலையும் அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதுமுள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், டீசல் விலையை குறைக்க வேண்டும், மூன்றாம் நபருக்கான காப்பீட்டுத்தொகையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 4.5 லட்சம் சரக்கு வாகனங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன. தொடர்ந்து 5-வது நாளாகத் தொடரும் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தால், தமிழகத்தில் காய்கறி விலை சற்றே உயர்ந்து காணப்படுகிறது.

காய்கறி வரத்து குறைந்துள்ளதால் அனைத்து காய்கறியின் விலையும் ஏறுமுகமாக உள்ளது. மேலும் காய்கறிகள் தேக்கம் அடைந்து அழுக தொடங்கியுள்ளது. காய்கறிகள் விற்பனை இல்லாததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் கவலை அடைந்துள்ளனர். மேலும் நாடுமுழுவதும் சரக்கு பொருள்கள் தேக்கம் அடைந்துள்ளது.

பல கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் விவசாய விளைபொருட்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் என்ற மாநில அரசின் அறிவிப்பால் காய்கறிகள் விலை ஓரளவு கட்டுக்குள் உள்ளது. எனவே லாரி உரிமையாளர்களிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதற்கிடையில் போராட்டத்தில் பங்கேற்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என்று டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் பங்குபெறும் பட்சத்தில் பெட்ரோல், பால், டீசல், குடிநீர் உள்ளிட்ட பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.