புதிய தலைமுறை மற்றும் வேலவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்தும் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி அறிவியல் கண்காட்சியின் 12 ஆம் ஆண்டு தொடக்க விழா போட்டியில் ஜூனியர் பிரிவில் வேலவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும், சீனியர் பிரிவில் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் முதல் பரிசை தட்டிச் சென்றனர்.
பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய தலைமுறை வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி இன்று அறிவியல் கண்காட்சியை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. இந்த ஆண்டு திருப்பூர் பல வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள வேலவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் இராச ராஜன், வேலவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் இளங்குமரன்,முதல்வர் அரவிந்த் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
ஜூனியர் , சீனியர் என 2 பிரிவில் மொத்தம் 400 கும் மேற்பட்ட படைப்புகளை பள்ளி மாணவர்கள் காட்சிப்படுத்தி உள்ளனர். அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருள்கள் முதல் அதி நவீன தொழில்நுட்பம் வரை புதிய புதிய வித்தியாசமான படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர்.
பள்ளி மாணவர்களின் படைப்புகளுக்கிடையே கடும் போட்டி நிலவிய நிலையில் ஜூனியர் பிரிவில் வேலவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மோகித், விக்னேஷ் ஆகியோர் முதல் பரிசை தட்டிச் சென்றனர். சீனியர் பிரிவில் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பிரசாத், ஆதர்ஷ் முதல் பரிசை வென்றனர். போட்டியில் முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள், மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதைத் தவிர போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்றமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.