சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் நில ஆக்கிரமிப்பு செய்யாமல் இருப்பதற்கு சந்தன கடத்தல் வீரப்பன் நடமாட்டமும் ஒரு காரணம் என முதன்மை வனப்பாதுகாவலர் பேசியுள்ளார்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் டிசம்பர் மற்றும் ஜூன் மாதங்களில் என ஆண்டுக்கு இருமுறை வனவிலங்கு கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கணக்கெடுப்பு நாளை தொடங்கி ஜூலை 4 ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெற உள்ளது. கணக்கெடுப்பில் பங்கேற்கும் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வனவிலங்கு கணக்கெடுப்பு குறித்த ஒருநாள் பயிற்சி சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரிஅம்மன் கோயில் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.
முதன்மை வனப்பாதுகாவலரும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குனருமான நாகநாதன் பயிற்சியை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் “காடுகளில் நில ஆக்கிரமிப்பு நடந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். இதில் 1985 ம் ஆண்டு முதல் 1995 ம் ஆண்டு வரை உள்ள கால கட்டங்களில் வனப்பகுதியில் அதிக அளவில் நில ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளது. குறிப்பாக கூடலூர், தேனி, கன்னியாகுமரி பகுதிகளில் அதிக அளவில் வனப்பகுதியில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன” என்றார்.
மேலும் பேசிய அவர் “அந்த காலகட்டத்தில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் வீரப்பன் நடமாட்டம் இருந்ததால், அவரது நடமாட்டம் நில ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு பெரிய தடையாக இருந்தது. வீரப்பன் குறித்து பொதுவெளியில் நேரடியாக பேச இயலாது. ஆனாலும் அவரால்தான் இந்தப்பகுதி ஆக்கிரமிப்பிலிருந்து தப்பியது. காடுகளை வீரப்பன் தவறான செயல்களுக்கு பயன்படுத்தியிருக்காலம். அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கலாம். வீரப்பனால் பல இடர்பாடுகள் இருந்தாலும் இந்த வனப்பகுதியில் பாதுகாப்பிற்கு மறைமுகமாக உதவி புரிந்தார்” என்று பேசினார்.
இந்த பயிற்சியில் மாவட்ட வன அலுவலர்கள், வனச்சரக அலுவலர்கள், வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.