தமிழ்நாடு

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று முதல் மூடல்

Rasus

பராமரிப்பு பணிகளுக்காக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று மாலை முதல் தாற்காலிகமாக மூடப்படுவதாக தமிழக வனத்துறை அறிவித்துள்ளது.

ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியா, மியான்மர், பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வர்ணநாரை, அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை உள்ளிட்ட 24 வகையான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வேடந்தாங்கல் வந்து செல்வது வழக்கம். ஆண்டுதோறும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பறவைகள் வரும். தற்போது ஏரியில் தண்ணீர் வற்றி வருவதால், பெரும்பாலான பறவைகள் இங்கிருந்து பறந்துவிட்டன. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பறவைகள் உள்ள நிலையில் சரணாலயத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இன்று மாலை 6 மணி முதல் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தாற்காலிகமாக மூடப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீஸன் தொடங்கி இதுவரை 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வந்து சென்றிருப்பதாக வன சரகர் சுப்பைய்யா தெரிவித்துள்ளார்.