திருமாவளவன் - ஆளூர் ஷா நவாஸ் Pt web
தமிழ்நாடு

”திருமாவளவனோடு கருத்து வேறுபாடு இல்லை” - ஆளூர் ஷா நவாஸ் விளக்கம்!!

திருமாவளவனோடு கருத்து வேறுபாடு இல்லை; கட்சியிலிருந்து விலகி திருச்சி கிழக்கில் போட்டியிடப்போவதாக வெளியான தகவல்கள் ஊகம் தான் என விசிக மாநில முதன்மை செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார்.

Premkumar S

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து 8 தொகுதிகளில் இருந்து போட்யிட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அப்போது, காட்டுமன்னார் கோவில் தொகுதியில் தான் போட்டியிடுவதாக தெரிவித்திருந்த திருமாவளவன், பிறகு தன் முடிவை மாற்றிக் கொண்டு தேர்தலில் போட்டியிடாதது அப்போது பெரும் பேசுபொருளாகியிருந்தது. அதேபோல, விசிகவில், ஆளூர் ஷா நவாஸ், பனையூர் பாபு மற்றும் எஸ்.எஸ். பாலாஜி ஆகிய சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு சீட் மறுக்கப்பட்டதும் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவே ஏற்கனவே, எம்.எல்.ஏ-க்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக தெரிவித்தார் அக்கட்சியின் திருமாவளவன். ஆனால், திமுகவுடன் நெருக்கமாக இருந்த காரணத்தினாலேயே அவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டதாக அப்போது பரவலாக பேசப்பட்டது.

திருமாவளவன்

இந்தநிலையில், விசிக தலைமை மீது பனையூர் பாபு மற்றும் ஆளூர் ஷா நவாஸ் இருவரும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டு வந்தது. இதற்கிடையில், தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியைச் சந்தித்தது. இதனையடுத்து, விசிக தற்போது தவெகவுக்கு ஆதரவளித்திப்பதுடன் அக்கட்சியுடன் கூட்டணியிலும் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக, விசிக செயல்பாடுகளில் அதிருப்தி இருப்பதாக தெரிவித்து பனையூர் பாபு திமுக-வில் இணைந்திருந்தார். அதேபோலவே, விசிக மாநில முதன்மை செயலாளர் ஆளூர் ஷா நவாஸ், விசிக தலைமை மீது அதிருப்தியில் இருந்து வருவதாகவும், புதிதாக கட்சி தொடங்கி திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவார் எனவும் தகவல் வெளியாகி வந்தது.

இந்தசூழலில் தான், இன்று புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ள விசிக முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் இது குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ”விசிக தலைவர் திருமாவளவனுடன் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. நீங்களே தான் இதுபோன்றதொரு கற்பிதத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். 1 மாதத்திற்கு மேலாக நான் தமிழ்நாட்டிலேயே இல்லை. இங்கு வந்தவுடன் விசிக கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறேன். திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறேன் என்று வெளியாகிய தகவல்கள் ஊகம் தான். தவெகவிற்கு ஆதரவு என்பது கட்சி கூடி எடுத்த முடிவு” எனத் தெரிவித்துள்ளார்.