2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டிவனத்தில் பிரச்சாரம் செய்த விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, தவெகவும் நாம் தமிழர் கட்சியும் பாஜக கிளை அமைப்புகள் என கடுமையாக குற்றம்சாட்டினார். ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே தமிழகத்தை பாதுகாக்கும் என வலியுறுத்திய அவர், விஜய் மற்றும் நாம் தமிழர் மீது வாக்காளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஒருபக்கம் ஆட்சியை தக்கவைக்கும் மெகா கூட்டணியை அமைத்திருக்கும் திமுக, மறுபக்கம் லெகஸியை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் அதிமுக கூட்டணி, தவெக, நாதக, சசிகலா-ராமதாஸ் என 5 முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், அனைத்துக் கட்சி தலைவர்களும் அனல்பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருவதோடு, மற்ற கட்சியை குறித்து பகிரங்கமாக விமர்சித்தும் வருகின்றனர்.
இந்தசூழலில் தான் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி இரண்டையும் விமர்சித்து பேசியுள்ளார்.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திண்டிவனம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வன்னியரசு, நேற்று திண்டிவனம் அருகே உள்ள மானூர் கிராமத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “தமிழக பாதுகாப்புக்காக தான் நம்முடைய மாண்புமிகு முதல்வர் டெல்லியா தமிழ்நாடா பார்க்கலாம் என்று சொன்னார். தமிழ்நாட்டைப் பாதுகாக்கக்கூடியது நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் இருக்கக்கூடிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தான்.
நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் இங்கே பாஜகவுக்கும், பாஜகவோட ஆதரவோடும் இருக்கக்கூடிய இரண்டு கும்பல் இருக்கிறது. ஒன்று விஜய் தலைமையிலான ஒரு கும்பல், இன்னொன்று நாம் தமிழர். அவர்களிடம் அனைவரும் ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். அவர்கள் திராவிடம்னா திருட்டு திராவிடம் என்று சொல்கிறார்கள், திராவிடத்தைத் திருட்டு திராவிடம் என்று சொல்கிறவர்கள், ஆதி திராவிடர்களை என்ன சொல்வார்கள்? யோசித்துப் பாருங்கள். ஒட்டுமொத்தமாக ஆரியத்துக்கும் பார்ப்பனியத்துக்கும் துணைபோகக்கூடிய மிக மோசமான பாஜகவுக்கு ஆதரவான கும்பல்தான் விஜய் என்கின்ற பெயரிலும் இங்கே நாம் தமிழர் என்கின்ற பெயரிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அவங்க சும்மா விசில் அடிப்பாங்க, விசில் அடிச்சுட்டே இருப்பாங்க. விசில் அடிக்கிறவங்களை தலைவர் என்று சொன்னால் தியேட்டருக்கு அனுப்பு, மக்களுக்குப் போராடுகிறவர்களை சட்டமன்றத்துக்கு அனுப்பு" என்று பிரச்சாரம் செய்தார்.