திருமாவளவன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“என்னை பயன்படுத்தி திமுகவை அழிக்க நினைக்கிறார்கள்..” - விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்

“என்னைச் சுற்றி ஏராளமான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவர்களின் உண்மையான குறி திமுகதான். திருமாவளவன் இல்லை” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர்: விவேக்ராஜ் 

கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் இன்று பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில்,

“அவர்களின் உண்மையான குறி திமுகதான். திருமாவளவன் இல்லை”

“தளபதியின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக இருக்கிறேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. என்னைச் சுற்றி ஏராளமான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எல்லா ஊடகங்களும் என்னை நோக்கியே இருக்கின்றன. அது என் மீது வைத்துள்ள மரியாதைக்காக அல்ல; எப்படியாவது காலி செய்ய வேண்டும் என்பதற்காக உள்ள சக்திகள் அவை. இதன் பின்னணியில் சூது இருக்கிறது, சூழ்ச்சி இருக்கிறது, சாதி பின்னப்பட்டிருக்கிறது. அவர்களின் உண்மையான குறி திமுகதான். திருமாவளவன் இல்லை.

அண்ணா அதிகாரத்தில் இருந்தபோது, திமுகவிற்கு எதிராக வேலை செய்த கூட்டம்தான்‌, இப்போதும் தொடர்ந்து இதை செய்து கொண்டிருக்கிறது. புதிதாக எங்கும் எதிரிகள் உருவாகி விடவில்லை. திமுக என்ற அரசியல் சக்தி வலுப்பெறக் கூடாது என நினைக்கிறார்கள். திமுக பேசுகின்ற அரசியல் வலுப்பெற கூடாது என்பதே அவர்களின் எண்ணம். ஏனெனில் திமுக பேசுகிற அரசியல் விளிம்பு நிலை மக்களுக்கான அரசியல், சமூக நீதி அரசியல், பெரியாருடைய அரசியல். ஆகவே திமுக என்கிற அரசியல் இயக்கம் வீழ்த்தப்பட வேண்டும் என்பதற்கான சதி நடக்கிறது. இது பெரியார் மறைவிலிருந்தே தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

தந்தை பெரியார்

பெரியார் அரசியலை எவன் பேசப் போகிறான் என நினைத்தார்கள். கலைஞர் இதோ நான் இருக்கிறேன் என தலைமை ஏற்றார். 50 ஆண்டு காலம் தமிழக அரசியலை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவருக்கு எதிராக எவ்வளவு அவதூறுகள் சூழ்ச்சி சதி வலைகள் பின்னப்பட்டன.

எல்லாவற்றையும்தான் தாக்குப்பிடித்து பெரியார் அரசியலை சமூகநீதி அரசியலை கட்டி காப்பாத்தினார் கலைஞர். அதனால் திமுக-வை வீழ்த்துவதற்கு எத்தனையோ சதிகள் நடந்தன. ஒருமுறை, இரண்டு முறை திமுக பிளவு பட இருந்தது.‌ அது சதி அரசியலின் விளைவுகளில் ஒன்று. மிசா மூலம் திமுகவை நசுக்கி விட முயற்சித்தது. அதிலும் தப்பி பிழைத்தது திமுக. அகில இந்திய அளவிலேயே மிசாவை எதிர்த்து நின்று அதே வலிமையோடு மீண்டெழுந்த வரலாறும் திமுக-விற்கு உண்டு.

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது திமுக மீது பழி சுமத்தப்பட்டது. இதனால் தமிழகத்தில் 232 தொகுதிகளிலும் தோல்வியடைந்தனர். இதையெல்லாம் தாங்கி தாக்குப் பிடித்து திமுக மீண்டெழுந்து வந்துள்ளது என்றால் அது கலைஞர் ஒருவரால்தான். பீனிக்ஸ் பறவை போன்று மீண்டெழுந்த வரலாறு திமுகவுக்கு உண்டு.

கலைஞர் கருணாநிதி

அப்படிப்பட்ட திமுகவை கலைஞருக்கு பிறகு இல்லாமல் ஆக்கிவிடலாம், வீழ்த்தி விடலாம் என சிலர் நினைத்தார்கள். ஆனால் தளபதி ஸ்டாலின் எழுந்தார். திமுக-வை கட்டிக் காக்க வேண்டிய வல்லமை ஸ்டாலினுக்கு இருக்கிறது என்பதால், திமுக-வை எவனாலும் இனி அழிக்க முடியாது. திமுகவை கட்டிக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல் பெரிய கூட்டணியை அமைத்து ஏழாண்டு காலம் அதனை வழி நடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், என்னை தூதராக பயன்படுத்திய ‘திமுக-வை ஒழித்து விட வேண்டும்’ என நினைக்கிறார்கள். அதற்கு பலியாக கூடிய வகையில் பலவீனமானவன் அல்ல இந்த திருமாவளவன்.

“எனக்கு அழுத்தம் இல்லை!”

எனக்கு ஏதோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறுகிறார்கள். என்னுடைய பண்பு என்னுடன் இருப்பவர்களுக்கு தெரியும். திருமாவளவன் இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசுகிறார் என பேசுகிறார்கள். அப்படிப்பட்ட அரசியல் எனக்கு தெரியாது. அந்த அரசியல் எங்களுக்கு தேவையும் இல்லை. ஆனாலும் அப்படி ஒரு தாக்குதல் என் மீது நடத்தப்படுகிறது.

திருமாவளவன், மு.க.ஸ்டாலின்

திமுகவிடம் ஒன்றை பேசிக்கொண்டு மறைமுகமாக பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறதோ என்ற ஒரு சந்தேகத்தை என் மீது எழுப்புகிறார்கள். என்னை நம்பி என்னுடைய தலைமையை ஏற்று களத்தில் இருக்கிற விடுதலை சிறுத்தை கட்சியினருக்கு நான் என்னைப் பற்றி தெளிவுபடுத்தக்கூடிய தேவை இருக்கிறது. வேறு யாருக்காகவும் இந்த செய்தியை நான் சொல்லவில்லை. திமுகவுக்காகவோ, அதிமுகாவுக்காகவோ அல்லது வேறு அரசியல் கட்சியினருக்காகவும் இதை சொல்ல நான் முயற்சி செய்யவில்லை. என் மீது நம்பிக்கை வைத்துள்ள தோழர்களுக்கு நான் சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.

நான் என் கட்சியினருக்கு சொல்வது, ‘விடுதலை சிறுத்தைகள் எப்போதும் சனாதனத்திற்கு எதிராகத்தான் இருப்போம். எந்த சூழலிலும் எங்கள் நலன் போதும் என கருதி சனாதனம் என்ற மனநிலையில் வலிமைப்படுவதற்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம். அதனால் எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டாலும் அதனால் எவ்வளவு பேரிழப்பு ஏற்பட்டாலும் அதனை தாங்கிக் கொள்ளும் சக்தியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கும்’ ” என்றார்.