தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

"சினிமா புகழ் மட்டும் போதுமா? இது தமிழ்நாட்டின் சாபக்கேடு" விளாசி தள்ளிய திருமாவளவன்

Prakash J

பள்ளிப் பொதுத் தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் சமீபத்தில் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். அப்போது பேசிய அவர், “மாணவ மாணவிகள் அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து படிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

விஜய்

அப்போது சில குழந்தைகள் விஜய்யிடம் “நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும்” என கோரிக்கை வைத்தனர். இதையொட்டி அன்று முதல் விஜய்யின் அரசியல் களம் குறித்து இணையதளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினரும் கருத்துகளை எடுத்துரைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான திருமாவளவன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நல்ல எண்ணத்தின் அடிப்படையில் அக்கருத்துக்களை நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். அதை நான் வரவேற்கிறேன். பொது வாழ்க்கைக்கு வரக்கூடியவர்கள் எந்த வயதிலும் வரலாம். அதில் ஒன்றும் தவறில்லை.

அப்படி வருபவர்கள் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும்; மக்களுக்கு வேலை செய்ய வேண்டும். மேலும் ஆட்சி பற்றிய கனவு இருக்க வேண்டும். பொதுவாக, சினிமாவில் இருக்கும் நபர்கள் எல்லோரும் உடனே முதல்வராகி விடலாம் என்ற எண்ணத்துடன் அரசியலுக்கு வருகிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை இது சாபக்கேடாக இருக்கிறது.

இந்தியாவின் பிற மாநிலங்களில் திரையுலகைச் சேர்ந்தவர்கள், அவர்களுடைய தொழிலை மட்டுமே செய்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் மட்டும் சினிமாவில் இருப்பவர்கள் மார்க்கெட் போன காலகட்டத்தில் அரசியலுக்கு வரலாம் என நினைக்கிறார்கள். அரசியலுக்கு வந்து மக்களைச் சுலபமாகக் கவர்ந்துவிட முடியும் என நினைக்கிறார்கள்.

மற்ற மாநில திரையுலகத்தினர் யாரும் கடைசி காலத்தில் பவருக்கு வரலாம் என கணக்குப் போடுவதில்லை. கேரளாவில் மம்முட்டி இருக்கிறார்; கர்நாடகாவில் ராஜ்குமார் இருந்தார்; இந்தியில் அமிதாபச்சன் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இவர்கள் யாரும் முதல்வர் ஆக ஆசைப்பட்டது கிடையாது.

என்.டி.ராமராவ், எம்.ஜி.ஆர். ஆகியோர் மிகவும் அரிதானவர்கள். அதே அடிப்படையில் எல்லோரும் வர முடியாது. அப்படி வந்த பல பேர் பின்னுக்குப் போய் இருக்கிறார்கள். மக்களுக்குத் தொண்டு செய்து அவர்களுக்குப் பணியாற்றி எத்தனையோ பேர் சிறை சென்றிருக்கிறார்கள்; வாழ்க்கையைத் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் ஓவர்டேக் செய்து, பைபாஸ் செய்து, ஹைஜாக் செய்துவிடலாம் என்கிற சிந்தனை தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது. தமிழகத்தில் தன்னுடைய பிரபலத்தைப் பயன்படுத்தி மக்களைச் சுலபமாக ஏமாற்றிவிட முடியும் என்கிற கணக்கு உள்ளது.

நான், இதை விஜய்க்கு மட்டும் சொல்லவில்லை. திரைத்துறையில் உள்ள அத்தனை பேருக்குமே சொல்கிறேன். ’இவ்வளவு சம்பாதித்துவிட்டோம்; இனிமேல் போனால் ஆட்சியில் உட்காரலாம்’ என கணக்கு போட்டே அரசியலுக்கு வருகின்றனர். இது, தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் கிடையாது. யாரும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதே ஒரு யூகத்தில் உள்ளது. அவர் மாணவர்களுக்கு அறிவுரை மட்டும்தான் கூறியுள்ளார். ஆனால், அதற்குள் நீங்கள் அவர் அரசியலுக்கு வந்துவிட்டதாகவே எண்ணி கேள்வி கேட்கிறீர்கள்.

நாட்டில் மணிப்பூரில் கலவரம் வெடித்து வருகிறது. ஆனால், அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை. நடிகர் விஜய் பற்றிய கேள்விகள்தான் இருக்கின்றன. காலம் முழுவதும் நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா எனக் கேள்வி எழுப்பினீர்கள். தற்போது விஜய் குறித்து கேட்கிறீர்கள். அடுத்து அஜித் வருவாரா எனக் கேட்பீர்கள். சாவர்க்கரை படியுங்கள் எனச் சொல்லாமல், அம்பேத்கர், பெரியார் பற்றிப் படியுங்கள் என விஜய் சொன்னதற்து பெரிய மகிழ்ச்சி. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்; வரவேற்கிறேன். எந்த நடிகர்களும் அரசியலுக்கு வருவதால் யாருக்கும் பதற்றம் இல்லை. நடிகர் விஜய் முதலில் அரசியலுக்கு வரட்டும்; அவர் வந்தபிறகு கேள்வி கேளுங்கள்” என்றார்.

நடிகர் விஜய் மற்றும் இதர கேள்விகளுக்கு தொல்.திருமாவளவன் அளித்த முழுப் பதிலையும் கேட்க இந்த வீடியோவைப் பார்க்கவும்.