தமிழ்நாடு

“ரஜினி 2021ல் போட்டியிட்டால்..? சீமான் சொன்னது..?” - திருமாவளவன் பளீச் பதில்கள்..!

“ரஜினி 2021ல் போட்டியிட்டால்..? சீமான் சொன்னது..?” - திருமாவளவன் பளீச் பதில்கள்..!

webteam

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் திருமாவளவனிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவரின் பதில்களும் பின்வருமாறு :

கேள்வி : இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றீர்கள் ? ஆனால் மக்கள் உங்களுக்கு பாடம் புகட்டிவிட்டார்களா ?

பதில் : ஒப்புக்கொள்கிறேன். எங்கள் திமுக கூட்டணிக்கு இது ஒரு பாடம் தான். இவ்வளவு பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறும் என நான் எதிர்பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இரண்டு தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. பிறகு ஒரு தேக்க நிலையை உணர முடிந்தது. தேர்தலுக்கு முன்பே அதை உணர்ந்தேன்.

கேள்வி : இடைத்தேர்தல் களத்திற்கு போக முடியாத சூழ்நிலை உங்களுக்கு இருந்ததா ?

பதில் : களத்திற்கு நான் போனேன். இரண்டு தொகுதிகளிலுமே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு நான் இங்கே ஒரு நாள், அங்கே ஒரு நாள் என பிரச்சாரம் செய்தேன். ஆளும் கட்சித் தரப்பில் இதுவரை இல்லாத அளவிற்கு பணத்தை தாரளமாக இறக்கிவிட்டார்கள். 

கேள்வி : ஆளும் கட்சிக்கும், மோடிக்கும் எதிரான அலை மக்கள் மத்தியில் குறைந்துவிட்டதா ? அதனால் தான் தோல்வியா ?

பதில் : எப்போதுமே ஆளும் கட்சிக்கு எதிரான அலை மக்கள் மத்தியில் இருப்பதில்லை. இந்த தேர்தலில் தோற்றதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று ஆளும் கட்சியின் அதீத பொருட்செலவு. இரண்டாவது திமுக கூட்டணி கையாண்ட தேர்தல் யுக்திகளில் ஏற்பட்ட பிழைகள். குறிப்பாக விக்கிரவாண்டி தொகுதியில் திமுக-அதிமுக என்ற களம் இல்லாமல், திமுக-பாமக என தேர்தல் மாறிவிட்டது.

கேள்வி : இடைத்தேர்தல் வெற்றி மூலம் இனி தமிழக அரசியலில் மூன்றாவது அணிக்கு இடமில்லை என்பதை அதிமுக உணர்த்தியுள்ளதா ?

பதில் : தமிழகத்தில் இனி வரும் காலங்களில் திமுக-அதிமுக இடையே தான் அரசியல் போட்டி இருக்கும். 2021 சட்டமன்ற தேர்தலிலும் இது தொடரும். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும், அதை மூன்றாவது அணி என்று கூறுவார்களே தவிர, அது இரண்டாம் இடத்தை அடைவதற்கான வாய்ப்பு உருவாகாது. 

கேள்வி : விக்கிரவாண்டியில் சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் திருமாவளவன் நிலை என்ன ?

பதில் : சீமான் பேச்சை நாம் இரண்டு பகுதியாக பார்க்க வேண்டியிருக்கிறது. ஒன்று ஐபிகேஎஃப் (இந்திய அமைதிப்படை) தொடர்பானது. மற்றொன்று ராஜீவ் கொலை தொடர்பானது. ஐபிகேஎஃப் தமிழர்களுக்கு எதிராக இருந்தது என்பது ஊரறிந்த, உலகறிந்த உண்மை. அன்றைக்கு ஐபிகேஎஃப் இலங்கைக்கு போக வேண்டும் என கோரிக்கை வைத்து போராடிய மாணவர்களில் நானும் ஒருவன். அதன்பின் ஐபிகேஎஃப் திரும்பப் பெற வேண்டும் என போராடியவர்களும் நாங்கள் தான். ஐபிகேஎஃப் தமிழர்களுக்கு எதிராக இருந்தது என்பதற்காக அன்றைக்கு தமிழகம் வந்த அவர்களை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிவரவேற்கவில்லை. அந்த வகையில் கருணாநிதியும் எதிர்த்தார், நானும் எதிர்த்தேன், தமிழர்களும் எதிர்த்தார்கள், விடுதலைப் புலிகளுடன் பகையாக இருந்தவர்களும் சேர்ந்து எதிர்த்தனர். அந்த வரிசையில் சீமான் கூறிய கருத்தும் சரியானது தான். அவரின் கோபம் நியாயமானது தான். 

ஆனால் ராஜீவ் காந்தியின் கொலையை நாங்கள் தான் செய்தோம் என்ற கருத்து விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரானது. இருப்பினும் சீமான் சொன்ன கருத்தை எதிர்க்கவில்லை. ஆனால் அதேசமயம் விடுதலைப் புலிகள் ஒருபோதும் நாங்கள் தான் ராஜீவை கொன்றோம் என்று கூறியதில்லை.” எனக் கூறினார்.