விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் மூத்த சகோதரர் நேற்று உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் புதுச்சேரி சென்றார். அப்போது அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருமாவளவன் செய்தியாளர்கள சந்தித்தார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், இந்திய அரசின் அழுத்தத்தை அடுத்து இந்தியாவில் தங்கி உள்ள இலங்கை அகதிகள் இலங்கை திரும்பி வருகிறார்கள், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இலங்கை திரும்பிய நிலையில் அங்குள்ள ஆட்சியாளர்கள் அவர்களை கைது செய்து வருகிறார்கள். இது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாகவும், இவ்விவகாரத்தில் இந்திய அரசு மற்றும் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காணுவதோடும் அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், நீண்ட இடைவெளிக்கு பிறகு திமுகவின் பொதுக்குழு இன்று மதுரையில் கூடியது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கடந்த நான்காண்டுகளில் அனைத்து தரப்பினரின் நன்மதிப்பை பெறக்கூடிய வகையில் பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறார் தமிழக முதலமைச்சர், எனவே வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு மக்களின் பேராதரவோடு அவரது தலைமையில் இயங்கும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, மாபெரும் வெற்றியே பெரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து பாமக விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், பாமகவில் நடப்பது உட்கட்சி விவகாரம் என்றும், அது பற்றி தான் கருத்து சொல்ல எதுவும் இல்லை, விடுதலைச் சிறுத்தைகளோடு அவர்கள் எந்தவிதமான போட்டியும் இல்லை, அதனால் வெற்றி தோல்வி பேச்சுக்கு இடமில்லை, எங்கள் களமும் வேறு எங்கள் பயணமும் வேறு எனவே பாட்டாளி மக்கள் கட்சியை நாங்கள் ஒருபோதும் போட்டியாக நினைக்கவில்லை என கூறினார்.
தொடர்ந்து பாமக திமுக கூட்டணிக்கு வந்தால் விசகவின் நிலைபாடு என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், யூகங்களின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் அவசியம் இல்லை என கூறினார்.
நடிகர் கமலஹாசனுக்கு கொடுத்த வாக்கின்படி தமிழக முதலமைச்சர் அவருக்கென்று மாநிலங்களவையில் ஒரு இடத்தை ஒதுக்கி தந்துள்ளார், இது மதசார்பற்ற கூட்டணிக்கு ஒரு நம்பகத்தன்மைக்கான அடையாளம், ஆனால் அதிமுக அவ்வாறு ஒரு வாக்குறுதியை கொடுத்திருப்பதாக தேமுதிகவினர் தெரிவித்துள்ளார்கள். அந்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை, அவர்களுக்கு ஒதுக்கு வேண்டிய இடத்தை ஒதுக்கவில்லை, இது அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றாக தான் இருக்கிறது. இதே போல் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு மாநிலங்களவை இடம் வழங்காதது குறித்து திமுக தான் பதில் சொல்ல வேண்டும் என தெரிவித்தார்.