திருமாவளவன் - விஜய் Pt web
தமிழ்நாடு

”சட்டப்பேரவையின் மரபையும்; முதல்வருக்கான மாண்பையும் காத்திட வேண்டும்” - திருமாவளவன் வேண்டுகோள்!

சட்டப் பேரவைக்கான மரபையும் முதலமைச்சருக்கான மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Premkumar S

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 18-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், முதல்வர் உரையுடன் நேற்று முடிந்திருக்கிறது. முன்னதாக, சட்டப்பேரவையின் இரண்டாவது நாள், காவிரியில் கர்நாடகா அணைக்கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் கொண்டு வந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது. தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் ஆளுநர் உரை மீதும், தவெக ஆட்சி குறித்தும் எதிர்க்கட்சியில் சட்டப்பேரவையில் விமர்சனங்களை முன்வைத்தும், அதற்கு தவெக தரப்பில் இருந்து விளக்கமளித்தும் நிகழ்வுகள் நடந்தன.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்

தொடர்ந்து, சட்டப்பேரவையின் இறுதிநாளான நேற்று முதல்வர் விஜய் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்தும், எதிர்க்கட்சிகளின் விமர்சங்களுக்கு பதிலளித்தும் பேசினார். அப்போது, முந்தைய ஆட்சியில் முறைகேடு நடந்திருப்பதாகவும், டாஸ்மாக் துறையில் இருந்து கட்சி நிதி சென்றிருப்பதாகவு முதல்வர் விஜய் பேசிய நிலையில், தங்கள் கட்சி மீது அவதூறு பரப்புவதாக தெரிவித்தும் எதிர்க்கட்சியான திமுக அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தது.

தொடர்ந்து பேசிய முதல்வர், குட்டிக்கதைக் கூறுவதாக கூறி, ”அப்பாவை தேடுகிறேன்; அப்பாவை காணோம்” என திமுகவை விமர்சிக்கு வகையில் பேசினார். மேலும், தேர்தல் பரப்புரையின் போது, ஸ்டாலின் காங்கிரஸ் உடனான தொகுதி பேரம் இறுதியாகிவிட்டது எனக் கூறும் வகையில் கையில் சைகை செய்தது அப்போது, பெரிய அளவில் வைரலாகியிருந்தது. இந்தசூழலில் தான், அந்த சைகையை சட்டப்பேரவையில் நேற்று செய்திருந்தது பேசுபொருளாகியிருந்தது.

விஜய்

சட்டப்பேரவையில், முதல்வர் விஜய் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில், சைகை செய்திருந்தை அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் தான், விசிக தலைவர் திருமாவளவன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மேனாள் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது 'முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதலமைச்சர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.