கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி விசிக சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. விசிக தலைவர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான அக்கட்சியின் தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது, ரேம்ப் வாக் மேடையில் அதிகப்படியான தொண்டர்கள் ஏற முயன்றதால், தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், பலர் மயக்கமடைந்த நிலையில், திருமாவளவன் சிறுதி நேரம் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, மாநாடு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன், கரூரில் தவெக கூட்டத்தில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட சோகமான விபத்து போல, இந்த மாநாட்டிலும் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழ்ந்துவிடக் கூடாது என்ற தீவிரமான பதற்றமும் கவலையும் தனக்குள் இருந்தது எனவும் எனவே விரைவாக மாநாட்டை முடித்துக் கொண்டதாகவும் கூறியிருந்தார்.
இந்தச்சூழலில் தான், மாநாடு நடைபெற்று ஒரு வாரத்தை கடந்திருக்கும் நிலையில், இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு விசிகவின் செங்கல்பட்டு ஆவண மைய மாவட்ட அமைப்பாளர் ராஜா தலைமையில் அக்கட்சியினர் வந்தனர். அப்போது, நடந்து முடிந்துள்ள தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் திட்டமிட்ட சதி என்றும், தலைவர் திருமாவளவனை தாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறி புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜா கூறுகையில், ”உளுந்தூர்பேட்டை மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் இயற்கையானது அல்ல. யாரோ ஒரு சமூக விரோதி திட்டமிட்டு தூண்டிவிட்டு, பல நூறு பேரை ஒரே நேரத்தில் மேடையில் ஏற்றி இந்த செயற்கையான நெரிசலை ஏற்படுத்தியதாக நாங்கள் சந்தேகிக்கின்றோம். இந்த நெரிசலின் போது விசிக தலைவர் திருமாவளவனை தாக்கும் நோக்கில் முகம் தெரியாத சிலர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தாக்கும் வகையிலான சில வீடியோ ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. அந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்தச்சூழலில் தான், கட்சியின் தலைவரை தாக்கும் நோக்கில் திட்டமிட்டு நெரிசல் உருவாக்கப்பட்டதாகக் கூறி, வீடியோ ஆதாரங்களுடன் விசிகவினர் புகார் அளித்துள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.