ஐ.பி.எஸ் அதிகாரியான வருண்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
தன்னை பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றியும் அவதூறு பரப்பியதாக சீமான் மீது திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வருண்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான வருண்குமார் ஐ.பி.எஸ்., 30 நிமிடங்கள் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது சீமானின் அறிக்கை, வீடியோ உள்ளிட்ட 9 ஆவணங்களை நீதிமன்றத்தில் அவர் சமர்பித்துள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வருண்குமார், சீமான் தன்னை பகிரங்கமாக மிரட்டியதையும், தனது குடும்பத்தினரை தவறாக சித்தரித்ததையும் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக கூறினார். சீமானின் மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன் என்றும், சீமானுக்கு உரிய தண்டனை வாங்கி தருவேன் என்றும் உறுதியளித்தார்.
சமீபத்தில் திருச்சி மாவட்ட எஸ்.பியாக இருந்த வருண் குமார் ஐ.பி.எஸ் DIG-ஆக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக DIG-ஆக நியமனம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.