தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு விநாயகர், உழவு விநாயகர் - களைகட்டிய சதுர்த்தி !

ஜல்லிக்கட்டு விநாயகர், உழவு விநாயகர் - களைகட்டிய சதுர்த்தி !

webteam

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், விவசாயத்தின் மேன்மைகளை குறிக்கும் வகையில் விதவிதமான விநாயகர் சிலைகள் தயாராகி உள்ளன.

ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்படும். பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் நற்பணி மன்றங்கள் சார்பில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு சதுர்த்தி அன்று வழிபாடு முடிந்தவுடன் ஊருக்கு வெளியே உள்ள கண்மாய்களில் கரைக்கப்படும். பொதுவாக விநாயகரின் அவதாரங்கள் சிலையாக வடிக்கப்பட்டு சதுர்த்தி கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு வித்தியாசமான முறையில் விவசாயத்தின் மேன்மைகளை குறிக்கும் வகையில் பெரும்பாலான விநாயகர் சிலைகள் தயாராகி உள்ளன. குறிப்பாக ஒரே ரதத்தில் தயார் செய்யப்பட்டுள்ள ராஜ கணபதி மற்றும் மும்மூர்த்திகளை குறிக்கும் விநாயகரை அடுத்து, ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் விநாயகர், விவசாய பணி முடிந்து, இரு சக்கர வாகனத்தில் அறுவடைக்கு பயன்படுத்தும் அரிவாளுடன், கால் நடைகளுக்கு புல்லுக்கட்டு ஏற்றி செல்லும் விநாயகர், டிராக்டரில் உழவு செய்யும் விநாயகர், தம்பி முருகனை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு திருவிழா வேடிக்கை காட்டும் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாராகி உள்ளன.

மேலும் சுற்றுச் சூழலை பாதிக்காத வண்ணம் கிழங்கு மாவு, தேங்காய் நார் உள்ளிட்ட மூலப் பொருட்களால் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பு. இது போன்று விவசாயத்தை அடிப்படையாக கொண்டு செய்யப்பட்டுள்ள சிலைகளுக்கு விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் வரவேற்பு அளித்துள்ளனர். இது போன்ற சிலைகளை செய்து சதுர்த்தியை கொண்டாடும் சமூக ஆர்வலர் ராமராஜ் என்பவருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்தச் சிலைகள் ஆவரம்பட்டி பகுதியில் உள்ள திடலில் வைக்கப்பட்டு வழிபாடு முடிந்தவுடன் நீர் நிலைகளில் கரைக்கப்படும்.