Lourdhu Francis  web
தமிழ்நாடு

மணல் மாஃபியா; VAO கொலை.. ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

மணல் மாஃபியா எதிர்ப்பு புகார் காரணமாக VAO லூர்து பிரான்சிஸ் அலுவலகத்திலேயே வெட்டிக்கொலை; குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை மதுரை அமர்வு உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

PT WEB

மணல் மாஃபியாவை எதிர்த்து புகார் அளித்ததால் VAO லூர்து பிரான்சிஸ் அலுவலகத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் ராமசுப்பிரமணியன், மாரிமுத்து மீது தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை மதுரை அமர்வு உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. ஐந்து மாதங்களில் விசாரணை முடித்த அதிகாரிகளை பாராட்டிய நீதிமன்றம், முக்கிய குற்றவியல் வழக்குகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்கும் சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு வழங்கியது.

செய்தியாளர் - சகாய பிரதீபா

கிராம நிர்வாக அலுவலர் (VAO) லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது. அதேசமயம், இதுபோன்ற முக்கிய குற்றவியல் வழக்குகளில் விரைவான விசாரணையை உறுதி செய்ய தமிழக அரசு கட்டமைக்கப்பட்ட கால அட்டவணையை வகுத்து சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Lourdhu Francis

ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய லூர்து பிரான்சிஸ், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி தனது அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தாமிரபரணி ஆற்றில் நடைபெற்று வந்த மணல் கொள்ளை குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்ததற்கான முன்விரோதமே இந்தக் கொலைக்கு காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து கைது செய்யப்பட்டு, இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வு, கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.

மேலும், இந்த வழக்கில் புலனாய்வு அதிகாரிகள், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணை நீதிபதி மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, சம்பவம் நடந்த ஐந்து மாதங்களுக்குள் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை நிறைவு செய்ததற்காக நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.

R. Ramasubramanian and M. Marimuthu, the two men convicted

இதுபோன்ற வழக்குகளில் தாமதமின்றி விசாரணை நடைபெற, காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் வழக்குத் தொடரும் துறையுடன் ஆலோசித்து, காலக்கெடு அடிப்படையிலான நடைமுறைகளை வகுத்து சுற்றறிக்கை வெளியிட தமிழக தலைமைச் செயலருக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், எதிர்காலத்திலும் இதுபோன்ற வழக்குகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படும் என்ற நம்பிக்கையையும் நீதிமன்றம் தனது உத்தரவில் பதிவு செய்துள்ளது.