கோவை ஒட்டர்பாளையத்தில் விவசாயி தாக்கப்பட்ட விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கோவை மாவட்டம் அன்னூரில் உள்ள ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளர் முத்துசாமி, விவசாயி கோபால்சாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி விவசாயி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே அலுவலக உதவியாளர் முத்துசாமி கோபால்சாமியை பலமாக தாக்கிய 2 ஆவது வீடியோ வெளியானதையடுத்து வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.
விவசாயியை தாக்கிய உதவியாளர் முத்துசாமி மற்றும் உடந்தையாக இருந்து உண்மைகளை மறைத்த கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் விஏஓ மற்றும் உதவியாளரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். காவல் நிலைய பிணையில் வெளிவரக்கூடிய பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்ததால், விசாரணைக்குப் பின் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.