செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட மிட்னாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மதன். கட்டிட மேஸ்திரியான இவருக்கும் அதே ஊராட்சி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணுடன் கடந்த 3 வருடங்களுக்கு முன் திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், மதன் ஆன்லைன் ரம்மியிற்கு அடிமையாகி தொடர்ந்து வீட்டில் இருந்த தங்க நகைகளை அடகு வைத்து, தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்,
இதையடுத்து ஆன்லைன் ரம்மியை கைவிடக் கோரி, மனைவி வெண்ணிலா மதனை பலமுறை வலியுறுத்தி, இதுகுறித்து சில மாதங்களுக்கு வெண்ணிலா வாணியம்பாடி அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து கணவன் மனைவி இருவரையும் காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மதன், தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததால், மனமுடைந்த வெண்ணிலா இன்று தனது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்,
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பலூர் காவற்துறையினர் வெண்ணிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளிலே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி வருவாய் கோட்டாச்சியர் அஜிதா பேகம் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.