தமிழ்நாடு

வாணியம்பாடி: அணையில் குளிக்கச் சென்ற பள்ளி உதவியாளர் மற்றும் மாணவன் நீரில் மூழ்கி பலி

webteam

வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள தடுப்பணையில் குளித்து கொண்டிருந்த பள்ளி மாணவன் மற்றும் பள்ளி உதவியாளர் 2 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த இலியாஸ் அஹமத் (45), உஜேர் பாஷா ((17), உவேஸ் அஹமத்(16), ராகில் பயஸ்(22) ஆகிய 4 பேர் ஆந்திர மாநிலம் தமிழக - ஆந்திர எல்லை பகுதியில் உள்ள கங்குந்தி ஊராட்சி பெரும்பள்ளம் பகுதியில் பாலாறு குறுக்கே கட்டியுள்ள தடுப்பணையில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட தடுப்பணை பகுதியை கடந்து 4 பேரும் வனப்பகுதிக்குள் குளித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் திடீரென உஜேர் பாஷா நீரில் மூழ்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து அவரை காப்பாற்ற முயன்ற இலியாஸ் அஹமத் நீரில் மூழ்கி உள்ளார். நடக்கும் நிகழ்வை கண்ட உடன் சென்றவர்கள், செய்வதறியாது திகைத்து கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு உடனடியாக அப்பகுதி மக்கள் நீரில் மூழ்கிய 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் உஜேர் பாஷா மற்றும் இலியாஸ் அஹமத் ஆகியோரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் தேடுதல் போராட்டத்துக்குப் பிறகு இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து குப்பம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திரா தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பாகவே பொதுமக்களே சடலத்தை மீட்டனர்.