தமிழ்நாடு

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோடை வெப்பம் - விலங்குகளை காக்க வண்டலூர் நிர்வாகம் நடவடிக்கை

ஜா. ஜாக்சன் சிங்

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், வெப்பத்தில் இருந்து விலங்குகளை காக்க வண்டலூர் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் பிரதான சுற்றுலாத் தலமாக விளங்குவது வண்டலூர் உயிரியல் பூங்கா. இங்கு பல வகையான விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், அதில் இருந்து பறவைகள், விலங்கினங்களை பராமரிக்கும் நடவடிக்கையில் உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

பறவைகள் கூண்டுகளின் மேற்பகுதி முழுமையாக கோணிப் பைகளால் மூடப்பட்டு அவ்வப்போது தண்ணீர் தெளிக்கப்படுகிறது. இதனால் பறவைகள் வெப்பத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று பூங்கா நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். யானைகள் நாளொன்றுக்கு இரண்டு முறை குளிக்க பிரத்யேக ஷவர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. காண்டாமிருகம், நீர்யாணை, வரிக்குதிரை போன்ற விலங்குகளை பராமரிப்பு இடங்களிலும் அவ்வப்போது தண்ணீர் தெளிக்கப்படுகிறது.

அதேபோல புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் பகலில் அடிக்கடி தண்ணீரால் குளிப்பாட்டப்படுகிறது. அதன்மீது ஊழியர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வருகின்றனர், மான், கரடிகள், குரங்குகளுக்கு பழவகைகள், இளநீர் உள்ளிட்டவை உணவாக வழங்கப்படுகிறது. பூங்காவில் சிறுவர்கள் விளையாடி மகிழ நடைபாதைகளில் ஆங்காங்கே மழைச் சாரல் போன்று நீர்த் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளது. வண்டலூர் பூங்கா நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகள் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.