அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், திமுக உறுப்பினர் அல்ல எனவும், அவர் திமுக அனுதாபி எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “ஞானசேகரன் திமுக உறுப்பினர் அல்ல, நிர்வாகி அல்ல. ஆனால் அவர் திமுக அனுதாபி என்பதை முதலமைச்சர் ஒத்துக்கொள்கிறார்.
எங்கள் கேள்வி என்னவென்றால் ஒரு திமுக அனுதாபி இத்தனை சக்திவாய்ந்த துணை முதலமைச்சர், திமுக அமைச்சருடன் இவ்வளவு நெருக்கமாக இருக்கமுடியுமென்றால், ஒருவேளை குற்றவாளி சக்திவாய்ந்த கட்சியுடைய நிர்வாகியாக இருந்திருந்தால் இந்த வழக்கில் நீதி எப்படி கிடைத்திருக்கும்.
முதலமைச்சருடைய பதில் நிச்சயமாக திருப்திகரமாக இல்லை. மகளிரின் பாதுகாப்புக்காக, பெண்கள் ஒவ்வொரு நாளும் படும் துயரங்களுக்கு எதிராக இந்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தோ, முன்னேற்பாடுகள் குறித்தோ முதலமை குறிப்பிடவில்லை. முழுக்க முழுக்க ஆளுநர் மீதும், மத்திய அரசின் மீதும், சம்பந்தமில்லாமல் கல்வித்துறையைப் பற்றியும் பொள்ளாச்சி சம்பவம் பற்றியும் இங்கு குறிப்பிடுவது அவசியமில்லாதது. அவரது பதில் எங்களுக்கு திருப்திகரமாக இல்லை.
காவல்துறையை பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர், அரசியல் கட்சிகள் நியாயமாக விசாரணை நடைபெறவில்லை என்றால் ‘ஆதாரங்களை நீங்கள் கொடுங்கள்’ என கூறினால் என்ன அர்த்தம்? காவல்துறையை பேசாமல் எதிர்க்கட்சிகளிடம் கொடுத்துவிடலாமே. யார் குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் இப்போதுதான் சிறிது சிறிதாக தைரியமாக வந்துகொண்டிருக்கின்றனர். அவர்களை எல்லாம் முடக்குவதுபோல இந்த சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.