வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“மழை வெள்ள பாதிப்பிற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லையா? முதலமைச்சர் கூறுவது தவறு” – வானதி சீனிவாசன்

webteam

செய்தியாளர் - விக்னேஷ் முத்து

குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் மக்கள் மருந்தகத்தை சென்னை நெசப்பாக்கத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “மத்தியக் குழு அறிக்கை அடிப்படையில் மழை வெள்ள பாதிப்பிற்கு கிடைக்க வேண்டிய நிதி மத்திய அரசிடமிருந்து கண்டிப்பாக தமிழகத்திற்கு கிடைக்கும். மழை வெள்ள பாதிப்பிற்கு ஒரு பைசா கூட மத்திய அரசு வழங்கவில்லை என்று முதலமைச்சர் கூறுவது தவறு. தமிழக அரசுக்கு தேவையான நிதியை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட உடனேயே மத்திய அரசு கொடுத்துவிட்டது. அது பைசா கணக்கில் சேராதா.?

சாதுர்யம் இருந்தால் சாதித்து கொள்ளலாம் என்று நிதிமைச்சர் பேட்டியில் கூறியதை மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதை போல நிதி ஒதுகீட்டுடன் தொடர்புபடுத்தி திமுகவினர் கருத்து சொல்கின்றனர். நிதி அமைச்சர் சாதுர்யம் என்று குறிப்பிட்டது மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், தமிழகம் அதனால் பாதிக்கப்படுவதை தடுக்க ‘தமிழகத்தின் மனிதவளக் குறியீடு, பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளது குறித்து நிதி கமிஷனிடம் எடுத்துக் கூறி பரிகாரம் பெறலாம்’ என்பதை சுட்டிக்காட்டதான்.

தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு சென்றால் எங்களுக்கு பாதகமா என்று கேட்கிறீர்கள். எந்த கட்சி எங்கே செல்கிறார்கள் என தேர்தல் நெருங்கும் போதுதான் தெரியும். நாடு முழுவதும் காங்கிரசில் இருந்து பல்வேறு தலைவர்கள் பாஜகவில் இணைத்து வருகிறார்கள். சகோதரி விஜயதரணி சட்டமன்றத்தில் நல்ல முறையில் வாதங்களை எடுத்து வைப்பதை நான் பார்த்திருக்கிறேன். தேசிய சிந்தனை உள்ள அவர், பாஜகவுக்கு வந்ததை வரவேற்கிறேன்” என்று தெரிவித்தார்.